பக்கம் எண் :

1023
 
708.

விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்

வெருவிட நீண்டஎம் மானைத்

திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற

செல்வனை நாவல் ரூரன்

உரைதரு மாலைஓர் அஞ்சினோ டஞ்சும்

உள்குளிர்ந் தேத்தவல் லார்கள்

நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி

நண்ணுவர் விண்ணவர்க் கரசே.

11

திருச்சிற்றம்பலம்


11. பொ-ரை: நறுமணத்தைத் தருகின்ற தாமரை மலர்மேல் இருக்கின்ற பிரமனும், திருமாலும் அச்சங் கொள்ளும்படி, அவர்கள் முன் தீப்பிழம்பாய் நீண்டு நின்றவனாகிய, அலைகளை வீசுகின்ற கடல்நீர் சூழ்ந்த திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் பாடிய பாடல்களாகிய பத்தினையும், மனம் குளிர்ந்து பாட வல்லவர்கள், நரையும் திரையும் மூப்பும் சாக்காடும் இன்றி, தேவர்களுக்கு அரசராகும் நிலையை அடைவர்.

கு-ரை: "மூப்பும்" என உம்மை கொடுத்துப் பிரித்து, நடலையை வேறு ஓதினமையால், அஃது இறப்பாயிற்று. நடலை - துன்பம். அஃது அப் பெருந்துன்பத்தைக் குறித்தது. "அரசு" என்றது, அரசராகும் தன்மையை என்க.

ஏயர்கோன் கலிக்காமர் புராணம்
 

தொண்டை மானுக்கன் றருள்கொடுத் தருளும்

தொல்லை வண்புகழ் முல்லநா யகரைக்

கொண்ட வெந்துயர் களைகெனப் பரவிக்

குறித்த காதலின் நெறிக்கொள வருவார்

வண்டு லாமலர்ச் சோலைகள் சூழ்ந்து

மாட மாளிகை நீடுவெண் பாக்கம்

கண்ட தொண்டர்கள் எதிர்கொள அணைந்து

காயுநா கத்தர் கோயிலை அடைந்தார்.

- தி. 12 சேக்கிழார்