பக்கம் எண் :

1024
 

70. திருவாவடுதுறை

பதிக வரலாறு:

சுவாமிகள், திருவரத்துறை பணிந்து பல பதிகளையும் வணங்கிக் கொண்டு அன்பருடன் பொன்னியாற்றில் நீராடி திருவாவடுதுறை யணைந்து பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 296) இத் திருப்பதிகப் பாடல் முழுவதும், 'இங்கெனக்கு ஆர் உறவு' என்று பாடியிருத்தல் கருதத்தக்கது.

குறிப்பு: இத்திருப்பதிகம் நுதலிய பொருள், இதன் வரலாற்றானே விளங்கும்.

பண்: தக்கேசி

பதிக எண்: 70

திருச்சிற்றம்பலம்

709.கங்கை வார்சடை யாய்கண நாதா

கால காலனே காமனுக் கனலே

பொங்கு மாகடல் விடமிடற் றானே

பூத நாதனே புண்ணியா புனிதா

செங்கண் மால்விடை யாய்தெளி தேனே

தீர்த்த னேதிரு வாவடு துறையுள்

அங்க ணாஎனை அஞ்சல்என் றருளாய்

ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.

1



1. பொ-ரை: கங்கையைத் தாங்கிய நீண்ட சடையை உடையவனே, பூத கணங்கட்குத் தலைவனே, காலனுக்குக் காலனே, காமன் உடலுக்கு நெருப்பாகியவனே, அலை மிகுகின்ற பெரிய கடலில் தோன்றிய நஞ்சினை உடைய கண்டத்தை உடையவனே, உயிர்கட்கு முதல்வனே, அறவடிவினனே, தூயோனே, சிவந்த கண்களை யுடைய திருமாலாகிய இடபத்தை யுடையவனே, தெளிந்த தேன் போல்பவனே, கடவுளே, தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற கருணையாளனே, அடியேனுக்கு உறவாவார், உன்னையன்றி வேறு யாவர் உளர்! என்னை, 'அஞ்சேல்' என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்யாய்.