710. | மண்ணின் மேல்மயங் கிக்கிடப் பேனை | | வலிய வந்தெனை ஆண்டுகொண் டானே | | கண்ணி லேன்உடம் பில்லடு நோயாற் | | கருத்த ழிந்துனக் கேபொறை யானேன் | | தெண்ணி லாஎறிக் குஞ்சடை யானே | | தேவ னேதிரு வாவடு துறையுள் | | அண்ண லேஎனை அஞ்சல்என் றருளாய் | | ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே. | | 2 |
கு-ரை: 'அமரர்கட்குத் தலைவனே' என, வாளா அருளாது,''அமரர்கள் ஏறே'' என, உருவகித்து அருளினார், அவனது முதன்மையின் சிறப்புத் தேன்றுதற்கு. அமரர்கள் ஏறு, ஏகதேச உருவகம். இது, வலிமை நிலனாக வந்தது. ''ஏறு'' என்ற உருவகம், ஏனைய பெயர்களோடு இயைந்தது. திணைவழுவமைதி. 2. பொ-ரை: நிலவுலகின்கண் மானுட வாழ்க்கையில் மயங்கிக் கிடக்கக் கடவேனாகிய என்முன் நீயே வலிய வந்து என்னை ஆண்டு கொண்டவனே, தெளிவாகிய நிலவொளியை வீசுகின்ற சடையை உடையவனே, இறைவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற அண்ணலே, தேவர்களாகிய, விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, யான் கண் இல்லேனாயினேன்; அதன்மேலும், உடம்பில் வந்து பற்றி வருத்துகின்ற நோயினால் மனம் வருந்தினமையால், உனக்குத்தான் சுமையாய் விட்டேன்; எனக்கு உறவாவார் உன்னையன்றி வேறு யாவர் உளர்! ஆதலின், என்னை 'அஞ்சேல்' என்று சொல்லித்தேற்றி, எனக்கு அருள்செய்யாய். கு-ரை: ''என்னை வலிய வந்து'' என்றதில், என்னை, உருபு மயக்கம். ''உடம்பில்லடு நோய்'' என்ற லகர ஒற்று, விரித்தல். சுவாமிகள் கண்ணின்றி இருந்ததோடு, உடம்பிற் பிணியுற்று இருந்தமையையும் நினைக்க. ''கருத்தழிந் துனக்கே பொறை யானேன்'' என்றதை, ''கடை முறை உனக்கே பொறையானேன்'' (தி. 7 ப. 60 பா. 5) என்றதனோடு வைத்துக் காண்க. 3. பொ-ரை: நிகரற்ற தனங்களையுடைய உமையவளை ஒரு பாகத்தில் உடையவனே, மேலானவனே, ஊமத்தம் பூப் பொருந்திய
|