பக்கம் எண் :

103
 

ஆய்ந்து முடிவுபோக்கியுள்ளமை அறிஞர் உலகு அறிந்ததேயாகும். 

அடியார்களது வரலாற்றில், அவர்கள் புரிந்த செயற்கருஞ் செயல்களை யெல்லாம் ஓரிரு சொற்களாலாகிய அடைமொழிகளால் விளக்கும் திறம் அடிகட்கேயுரியது.


"இல்லையே என்னாத இயற்பகை"

(தி. 7 ப. 39 பா. 1)

"வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருள்"
"கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்"

(தி. 7 ப. 39 பா. 2)

"மும்மையால் உலகாண்ட மூர்த்தி"

(தி. 7 ப. 39 பா. 3)

"நாட்டமிகு தண்டி"

(தி. 7 ப. 39 பா. 5)

"கடல்சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற பெருமான்"

(தி. 7 ப. 39 பா. 9)

முதலிய தொடர்கள் ஆழ்ந்து இன்புறத்தக்கன.
"திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்"

(தி. 7 ப. 39 பா. 4)

"வம்பறா வரிவண்டு மணநாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன்"

(தி. 7 ப. 39 பா. 5)

என்னுந் தொடர்கள் தமக்கு முந்திய அவ்விரு பெருமக்கள் மாட்டும் அடிகள் கொண்டிருந்த பக்தித் திறத்தை இனிது விளக்குகின்றன.

"சிவனெனும் ஓசையல்ல தறையோ உலகில்
திருநின்ற செம்மை உளதே"

(தி. 4 ப. 8 பா. 1)

என்று வினவிய அருள்வீரர் அப்பரடிகளின் அருந்தொடரில் ஈடுபட்ட அடிகள், அதனையே அப்பரடிகளின் சிறப்பாக அமைத்து ஓதி, 'திருநின்ற செம்மை' என்ற தொடர் சிவபரம் பொருளாகிய திருவையே குறித்து நின்ற செம்மை எனத் தெளிவித்தல் எண்ணுந்தொறும் இன்பம் அளிப்பதாகும்.

இங்ஙனம் இவ்விரு பேராசிரியர்கள் திருவாக்குகளின் விளக்கவுரை போல அடிகள் அருளியுள்ள இடங்கள் பல. அவையெல்லாம் அறிஞர் உலகின் ஆய்வுத் திறத்தால் எண்ணி முடிந்த