பக்கம் எண் :

1032
 
718.வெண்ட லைப்பிறை கொன்றையும் அரவும்

வேரி மத்தமும் விரவிமுன் முடித்த

இண்டை மாமலர்ச் செஞ்சடை யானை

ஈச னைத்திரு வாவடு துறையுள்

அண்ட வாணனைச் சிங்கடி யப்பன்

அணுக்க வன்றொண்டன் ஆர்வத்தால் உரைத்த

தண்ட மிழ்மலர் பத்தும்வல் லார்கள்

சாத லும்பிறப் பும்மறுப் பாரே.

10

திருச்சிற்றம்பலம்


என்றது, வலியும், காதலும் நிலைக்களனாக வந்த உருவகம்..

10. பொ-ரை: வெண்டலையோடு பொருந்தும் பிறையையும், கொன்றைமலர் மாலையையும், பாம்பினையும், தேனையுடைய ஊமத்த மலரையும் ஒருங்கு விரவிச் சூடிக்கொண்ட சிறந்த இண்டை மாலையையுடைய, சிவந்த சடைமுடியையுடையவனும், முதற் கடவுளும், திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவலோக வாணனும் ஆகிய இறைவனை, அவனுக்கு அணுக்கனாய் நிற்கின்ற வன்றொண்டனாகிய, சிங்கடிக்குத் தந்தை, மிக்க அன்போடும் பாடிய இத்தண்ணிய தமிழ்மாலைகளாகிய பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்கள், இறத்தலையும் பிறத்தலையும் ஒழித்து, எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய் வாழ்வார்கள்.

கு-ரை: வெண்டலை, தாருகாவனத்து முனிவர்கள் விடுத்தது; அதனைச் சிவபெருமான் தன் தலையில் அணிந்து கொண்டமை அறிக. "அறுப்பார்" என்றது, அதன் காரியத்தையும் தோற்றுவித்து நின்றது. எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய் வாழ்தல், இறைவன் திருவடி இன்பத்தில் திளைத்திருத்தலாம்.