பக்கம் எண் :

1039
 
727.குண்டாடியுஞ் சமணாடியுங்

குற்றுடுக்கையர் தாமும்

கண்டார்கண்ட காரணம்மவை

கருதாதுகை தொழுமின்

எண்டோளினன் முக்கண்ணினன்

ஏழிசையினன் அறுகால்

வண்டாடுதண் பொழில்சூழ்ந்ததெழு

மணிநீர்மறைக் காடே.

9



'நலம் பெரியன, சுரும்பார்ந்தன, கலம் பெரியன' என்பவை, சிறப்புப்பெயர் பின் வந்த ஒரு பொருண் மேற் பல பெயர்; சிறப்புப் பெயர் பின் வாராமை, இயற்பெயர்க்குப் பின்னே யாதல் அறிக. வண்டுகள் நிறைதல், ஏற்றப்பட்டுள்ள நறுமணப் பொருள்கள் பற்றி.

9. பொ-ரை: உலகீர், சிறிய உடையை உடைய சிலர்தாமும் மூர்க்கத் தன்மை பேசியும், சமண சமயக் கொள்கைகளை உரைத்தும் சில பொருள்களை, தம் குறையறிவாற் கண்டார்; எனினும், அவைகளைப் பொருளாக நினையாது, எட்டுத் தோள்களை உடையவனும், மூன்று கண்களையுடையவனும், ஏழிசைகளையுடையவனும் ஆகிய சிவபெருமானது, ஆறு கால்களையுடைய வண்டுகள் சூழ்கின்ற குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த ஓங்கும் நீலமணிபோலும் கடல் நீரையுடைய திருமறைக்காட்டைக் கைகூப்பித் தொழுமின்கள்.

கு-ரை: குண்டர் என்பவர், சமண் சமய ஆசிரியர் ஒருவர் என்றும், 'அப்பெயர், 'குந்தர்' என வழங்குகின்றது' என்றும், அவரது கொள்கையே 'குண்டு' எனப்படுகின்றது எனவும் உரைப்பாரும் உளர்.

அது, பொருந்துமேற் கொள்க. 'கண்டார்' என்றது, கொல்லாமை முதலிய அறங்கள் நலம் பயக்கும் என்பதனை. அவர் அன்னராயினும், எல்லாவற்றிற்கும் முதல்வனாகிய இறைவன் உண்மையைக் காணாமை மேலும், அவ்வுண்மையை அழித்துரைத்தலின், "நிழல் நீரும் இன்னாத இன்னா" (குறள் - 881) என்றாற்போல அவரது அறம் தீங்கு பயத்தலின், "அவை கருதாது" என்று அருளிச் செய்தார். ஏழிசையை விரும்புதலை, அவற்றை உடைமையாக அருளினார்.