72. திருவலம்புரம் பதிக வரலாறு: தம்பிரான் தோழர், திருக்கடவூர் வீரட்டத்துப் பெருமானைப் பணிந்து திருவலம்புரம் சென்று தொழுது பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 147) குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவரது பெருமைகளை வகுத்தோதி, அவர்க்கு இடமாம் பெருமையுடைய இத்தலத்தினைச் சிறப்பித்து அருளிச்செய்தது. பண்: காந்தாரம் பதிக எண்: 72 திருச்சிற்றம்பலம் 729. | எனக்கினித் தினைத்தனைப் புகலிட மறிந்தேன் | | பனைக்கனி பழம்படும் பரவையின் கரைமேல் | | எனக்கினி யவன்தமர்க் கினியவன் எழுமையும் | | மனக்கினி யவன்றன திடம்வலம் புரமே. | | 1 |
1. பொ-ரை: எனக்கு இனியவனும், தனக்கு என்னைப்போலும் அன்பராய் உள்ளார்க்கு இனியவனும், எழுபிறப்பிலும் எங்கள் மனத்துக்கு இனியனாகின்றவனும் ஆகிய இறைவனது இடம், பனை மரத்தின்கண் பழுத்த பழங்கள் வீழ்கின்ற கடலினது கரைக்கண் உள்ள, 'திருவலம்புரம்' என்னும் தலமே. இதனை அறிந்தேனாகலின், எனக்கும் சிறிது புகலிடம் இங்கு உளதாதலை இப்பொழுது யான் அறிந்தேனாயினேன். கு-ரை: "தினைத்தனைப் புகலிடம்" என்பது, 'தினைத் தனையதாகிய புகலிடம்' என விரிக்கப்படும். "தினைத்தனையது" என்றது. 'சிறிது' என்னும் பொருளது. 'சிறிது புகலிடம்' என்றது, தமது பணிவு தோன்ற அருளியது. 'மனத்துக்கு என்பதில், அத்துச்சாரியை தொகுக்கப்பட்டு நின்றது. "இடம் வலம்" என்றது, ஓர் முரண்தொடை நயம்.
|