பக்கம் எண் :

1043
 
732.கொங்கணை சுரும்புண நெருங்கிய குளிரிளந்

தெங்கொடு பனைபழம் படும்இடந் தேவர்கள்

தங்கிடும் இடந்தடங் கடற்றிரை புடைதர

எங்கள தடிகள்நல் லிடம்வலம் புரமே.

4

733.கொடுமழு விரகினன் கொலைமலி சிலையினன்

நெடுமதிள் சிறுமையின் நிரவவல் லவனிடம்

படுமணி முத்தமும் பவளமும் மிகச்சுமந்

திடுமணல் அடைகரை இடம்வலம் புரமே.

5



4. பொ-ரை: மலர்களில் உள்ள தேனை ஆங்கு வந்த வண்டுகள் உண்ண, நெருங்கிய, குளிர்ந்த, இளைய தென்னை மரங்களும், பனை மரங்களும் பழம் விளைகின்ற இடமும், பெரியகடலினது அலைகள் கரையை மோத, தேவர்கள் தங்கியிருக்கும் இடமும், எங்கள் இறைவனது நல்ல இடமும், 'திருவலம்புரம்' என்னும் தலமே.

கு-ரை: "பழம் படும்" என, சினைவினை முதல்மேல் நின்றது. தேவர்கள் தங்குதல், இறைவனை வணங்குதற்குச் செவ்வி பெறாமையாலாம். 'கடல் அலைகளின் குளிரையும் பொறுத்துக் கொண்டு அவர்கள் ஆங்குத் தங்கியிருப்பர்' என்றபடி. 'எங்கள் அடிகளது' என உருபைப் பிரித்துக் கூட்டுக.

5. பொ-ரை: கொடிய மழுவை எடுக்க வல்லவனும், கொலை பொருந்திய வில்லையுடையவனும், மூன்று பெரிய மதில்களை ஓர் இமைப்பொழுதில் பொடியாக்க வல்லவனும் ஆகிய இறைவனது இடம், கடலில் உண்டாகின்ற மாணிக்கங்களையும், முத்துக்களையும், பவளங்களையும் மிகுதியாகத் தாங்கி நிற்கின்ற மணல் பொருந்திய கடற்கரையாகிய இடமும், திருவலம்புரம் எனப்படுவதும் ஆகிய தலமே.

கு-ரை: 'மூன்று' என்பதும், 'கடல்' என்பதும் ஆற்றலாற் கொள்ளக் கிடந்தன. "சிறுமை", அதனை உடைய காலத்தின்மேல் நின்ற பண்பாகுபெயர். நிரவுதல் - அழித்தல். "சுமந்திடும்" என்றதில் இடு, துணைவினை. 'சுமந்திடும் கரை' எனஇயையும். 'கரையிடம், வலம்புரம்' என்றன, ஒருபொருண்மேற் பல பெயர்.