734. | கருங்கடக் களிற்றுரிக் கடவுள திடங்கயல் | | நெருங்கிய நெடும்பெணை அடும்பொடு விரவிய | | மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம்புணர்ந் | | திருங்கடல் அடைகரை இடம்வலம் புரமே. | | 6 |
735. | நரிபுரி காடரங் காநட மாடுவர் | | வரிபுரி பாடநின் றாடும்எம் மானிடம் | | புரிசுரி வரிகுழல் அரிவைஒர் பான்மகிழ்ந் | | தெரிஎரி யாடிதன் இடம்வலம் புரமே. | | 7 |
6. பொ-ரை: கரிய மதநீரையுடைய யானைத் தோலையுடைய இறைவனது இடம், நெருங்கிய, நீண்ட பனைமரங்கள், கயல் மீன்களோடும், அடும்பங் கொடிகளோடும் கலந்து நிற்கின்ற இடத்தின்கண், வலம்புரிச் சங்குகளும், சலஞ்சலச் சங்குகளும் தம் தம் பெண் சங்குகளோடு மணஞ்செய்து கொள்ளுதலைப் பொருந்தி, பெரிய கடலினின்றும் வருகின்ற கடற்கரையாகிய இடமும், 'திருவலம்புரம்' எனப்படுவதும் ஆகிய தலமே. கு-ரை: "மருங்கொடு" என்றதனை, 'மருங்கின்கண்' எனத் திரிக்க. 7. பொ-ரை: நரிகள் விரும்புகின்ற காடே அரங்கமாக நடனம் ஆடுபவனும், யாழ் இசையைப்பாட நின்று ஆடுகின்ற எம்பெருமானும், பின்னிய, சுரிந்த, கட்டிய கூந்தலையுடைய மங்கையை ஒரு பாகத்தில் மகிழ்ந்து வைத்து, எரிகின்ற நெருப்பில் ஆடுபவனும் ஆகிய இறைவனது இடம், 'திருவலம்புரம்' என்னும் தலமே. கு-ரை: 'முதுகாடு' என்றற்கு, "நரிபுரி காடு" என்று அருளினார். "ஆடுவர்" என்றது ஒருமைப் பன்மை மயக்கம், ஒரு பொருள்மேற் பல பெயர் வருங்கால் அவற்றது முடிபினைப் பெயர் தோறும் கொடுத்தலும் அமைவதாகலின், "எம்மான் இடம்" என முன்னுங்கூறினார் "வரிபுரி" என்றதில் புரி, புரிக்கப்பட்ட நரம்பினை உடைய யாழுக்கு ஆகுபெயர். யாழ் உடையவர் பாடுதலை யாழ் பாடுதலாக அருளியது, பான்மை வழக்கு. இறைவன் ஆடும் வகையெல்லாம் இதனுள் அருளியவாறு.
|