பக்கம் எண் :

1045
 
736.பாறணி முடைதலை கலனென மருவிய

நீறணி நிமிர்சடை முடியினன் நிலவிய

மாறணி வருதிரை வயலணி பொழிலது

ஏறுடை யடிகள்தம் இடம்வலம் புரமே.

8


737.சடசட விடுபெணை பழம்படும் இடவகை

படவட கத்தொடு பலிகலந் துலவிய

கடைகடை பலிதிரி கபாலிதன் இடமது

இடிகரை மணலடை இடம்வலம் புரமே.

9



8. பொ-ரை: பருந்தைக்கொண்ட, முடைநாற்றம் பொருந்திய தலையை உண்கலமாகப் பொருந்தியவனும், நீற்றை அணிந்தவனும், நீண்ட சடைமுடியை உடையவனும் இடபத்தை உடைய தலைவனும் ஆகிய இறைவனது இடம், விளங்குகின்ற, மாறிமாறியும் கூட்டமாயும் வருகின்ற அலைகளையுடைய கடலையும், வயல்களையும் அழகிய சோலைகளையும் உடையதாகிய, 'திருவலம்புரம்' என்னும் தலமே.

கு-ரை: 'முடைத்தலை' என்னும் தகரவொற்று. இசையின்பம் நோக்கித் தொகுத்தலாயிற்று. "ஏறுடை அடிகள்தம் இடம்" என்றதனை, "முடியினன்" என்றதன்பின் வைத்து உரைக்க.

9. பொ-ரை: தோல் ஆடையை உடுத்துக்கொண்டும், சாம்பலைப் பூசிக்கொண்டும் உலாவுகின்றவனும், இல்லங்களின் வாயில் தோறும் பிச்சைக்குத் திரிகின்ற தலை ஓட்டினை உடையவனும் ஆகிய இறைவனது இடம், 'சடசட' என்னும் ஓசையை வெளிப்படுத்துகின்ற பனைமரங்கள் பழம் பழுக்கின்ற இடங்களின் வகை பலவும்மிகுமாறு, இடிகின்ற கரையை மணல்கள் அடைக்கின்ற இடமும், 'திருவலம்புரம்' எனப்படுவதும் ஆகிய தலமே.

கு-ரை: "வடகத்தொடு" என்றது முதலாக. "கபாலிதன் இடமது" என்றது ஈறாக உள்ளவற்றை முதற்கண் வைத்து உரைக்க. 'மணற்குன்றுகள் இடிந்து வீழ்ந்து மணற்பரப்பாகிய இடங்களில் பனைமரங்கள் வளர்ந்து, பழங்களைப் பழுக்கும் ஊர்' என்றவாறு, இது பற்றியேபோலும், இத்தலத்திற்கு, 'பெரும்பள்ளம்' என்ற ஒரு பெயரும் வழங்குகின்றது. 'இப்பெயர், இலிங்க மூர்த்தியின் தலையில் காணப்படும் பள்ளம்பற்றி வந்தது' என்பர். 'படகத்தொடு' என்பது