பக்கம் எண் :

1048
 

73. திருவாரூர்

பதிக வரலாறு:

சுவாமிகள், தில்லையில் கூத்தப்பெருமானை வணங்கியபின் "ஆரூரில் நம்பால் வருக" என்று இறைவன் அருளியது கேட்டுப் பல தலங்களையும் வணங்கிக்கொண்டு திருவாரூர் சென்று அங்கு, ஆரூர்ப்பெருமான் ஆணையின்படி அன்பர்கள் எதிர்கொண்டழைத்துச் செல்லும்பொழுது அவர்களை நோக்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. தடுத். புரா. 123)

குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவர் தம்மை ஆண்டுகொண்டருளும்படி வேண்டுமாறு, அடியவரை வேண்டி அருளிச்செய்தது.

பண்: காந்தாரம்

பதிக எண்: 73

திருச்சிற்றம்பலம்

740.கரையுங் கடலும் மலையுங்

காலையும் மாலையும் எல்லாம்

உரையில் விரவி வருவான்

ஒருவன் உருத்திர லோகன்

வரையின் மடமகள் கேள்வன்

வானவர் தானவர்க் கெல்லாம்

அரையன் இருப்பதும் ஆரூர் அவர்

எம்மையும் ஆள்வரோ கேளீர்.

1



1. பொ-ரை: தொண்டீர், நிலம், கடல், மலை முதலாய எவ்விடத்திலும், காலை, மாலை முதலிய எப்பொழுதிலும் எம் சொல்லிற் பொருந்திவருபவனும், ஒப்பற்றவனும், உருத்திர லோகத்தை உடையவனும், மலையின் இளமையான மகளுக்குக் கணவனும், தேவர், அசுரர் முதலிய யாவர்க்கும் தலைவனும் ஆகிய பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும், இத் திருவாரூரே யன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.

கு-ரை: "கரை" என்றது, 'கடலால் சூழப்பட்டுள்ளது' என நிலத்திற்குப் பெயராயிற்று. "எல்லாம்" என்றதனை இரட்டுற மொழிந்து,