741. | தனியன்என் றெள்கி யறியேன் | | தன்னைப் பெரிதும் உகப்பன் | | முனிபவர் தம்மை முனிவன் | | முகம்பல பேசி மொழியேன் |
"மலையும்" என்றதன் பின்னருங்கூட்டுக. 'எம் உரை' என்பது, ஆற்றலாற்கொள்ளக் கிடந்தது. "உரை" என்றது, பாட்டும், கட்டுரையுமாய இருதிறத்துச் சொற்களையுமாம். ஆகவே, 'யாம் அவனையே, பேசியும், பாடியும் நிற்பதல்லது, பிறிதொன்றனை அங்ஙனம் செய்தறியேம்' என்றவாறு, "உருத்திரலோகம்" என்றது, சிவலோகத்தை, மலையரையனை, 'மலை' என்றே அஃறிணைபோல அருளுகின்றாராகலின், 'வரைதன் மடமகள்' என்னாது, "வரையின் மடமகள்" என்று அருளினார். "இருப்பதும்" என்ற உயர்வு சிறப்பும்மையால், 'என்றும் இருப்பது' என்பது பெறப்பட்டது. 'என்றும்' என்றது, எல்லையறியப் படாத பழைமையைக் குறித்தது. திருவாரூரின் பழைமையை ஆளுடைய அரசுகள், "ஒருவனாய் உலகேத்த" என்னும் திருத்தாண்டகத் திருப்பதிகத்துள் பலபடியாக விதந்தோதியருளியவாற்றான் அறிக. சுவாமிகள், திருவெண்ணெய்நல்லூரில் முன்னரே ஆட்கொள்ளப் பெற்றாராயினும், அதனால், திருக்கயிலையில் தாம் வேண்டிக்கொண்ட வேண்டுகோட்கு இரங்கிய இரக்கம் அறியப்படுவதன்றி, தன் சீரடியாருள் ஒருவராகத் தம்மையும் வைத்து விரும்பிக் கொள்ளும் விருப்பம் அறியப்படாமையானும், அஃது அறியச் செய்தற்குரிய இடம், திருக்கூட்டம் இருக்கும் திருவாரூரேயாகலானும், ஆட்கொள்ளப்பெற்றிலார்போல, "எம்மையும் ஆள்வரோ" என்றும், அவரது திருவுள்ளத்தை அணுகியறிதல், புத்தடியேனாகிய எனக்கு இயல்வதன்றாகலின், பழவடியீராகிய நீவிர் அது செய்தருளல் வேண்டும் என வேண்டுவார், "கேளீர்" என்றும் அருளிச்செய்தார். 'ஆட்கொள்ளப் பெறுந் தகுதியுடையேன்' என்பதனை, "கரையும் கடலும் மலையும் காலையும் மாலையும் எல்லாம் - உரையில் விரவி வருவான்" என்றதனால் விளக்கினாராகலின், "எம்மை" எனப் பன்மையாக அருளினார். அங்ஙனமாகவே, "எம்மையும்" என்ற உம்மை, இறந்தது தழுவிய எச்சமாம். 'அவர்' என்றதும், 'ஆள்வாரோ' என்றதும் ஒருமை பன்மை மயக்கம். 2. பொ-ரை: தொண்டீர், இனிய பொருள்கள் எல்லாவற்றினும் இனியவனாகிய நம் பெருமானை, யான், 'தாயும், தந்தையும், பிற சுற்றத்தவரும் இல்லாத தனியன்' என்று இகழ்ந்தறியேன்; அதற்கு மாறாக அவனையே பெரிதும் விரும்புவேன்; அவனை வெறுப்பவரை
|