பக்கம் எண் :

105
 

பதி:

இனி பதிமுதுநிலைபற்றி அடிகள் கூறும் கருத்துக்கள் சிறப்புடையன. இறைவன் மூத்த பழமை உடைமையை நம்மாசிரியர்கள் மிகச் சிறப்பித்து உரைத்துள்ளார்கள்.

"பதி பசு பாசம் எனப்பகர் மூன்றிற்
பதியினைப் போற்பசு பாசம் அநாதி"

(தி. 10 தந். 1 - 2 ப. 3)

என்பார் திருமூலர்.

"முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி"
என்பது (தி. 6 ப. 19 பா. 1) அப்பர் திருவாக்கு.

'பிறப்பில் பெருமான்'

(தி. 1 ப. 116 பா. 6)

'பிறப்பாதி இல்லான்'

(தி. 1 ப. 134 பா. 4)

என்பன திருஞானசம்பந்தர் திருவாக்குகள். உமாபதி தேவநாயனார் பதிமுதுநிலை குறித்த ஆசிரியர் திருவாக்காக மேற்கொண்டுள்ள திருப்பாட்டு நீடூர்த் திருத்தலமாகும். இறைவனது ஐந்தொழில் மாண்பை எடுத்துக்காட்டுவதாகும் இது. இறைவனது அநாதி முறைமையான பழமையினை இதன்கட் காணலாம். கடவுளியல்பு, சிவசக்தியின் இயல்பு, சிவத்தின் அருட்செயல்கள் திருவருளை நுகரும்வழி முதலியனபற்றிய வெல்லாம் இத்திருநெறியின்கண் அடங்கும்.

உயிர்:

உயிரவை நிலை என்ற பொருளிற் காட்டப்பட்டன இரண்டு பாடல்கள். இறைவன் அடியார்கட்கு அருள்செய்கின்ற திறம் கூறுவதும், அடியார்கள் நல்லியல்புகளைக் கூறுவதும் ஆகிய இரு கருத்துக்களை உடையவை இவை.

'பத்தித்த வல்வினைப் பற்றறப் பிறவிப்
படுகடற் பரப்புத் தவிர்ப்பானை'

(தி. 7 ப. 67 பா. 7)

'கூசநீக்கிக் குற்றநீக்கிச் செற்றமன நீக்கி'

(தி. 7 ப. 7 பா. 7)

எனவரும் தொடர் உயிர்களின் நிலையை உரைப்பன.