அறியுநெறி: உயிர்கள் இறைவன் திருவருளையே கண்ணாகக் கொண்டு தம்மையும் தம் தலைவனாகிய இறைவனையும் அறியும் முறையினைப் புலப்படுத்தும் சுந்தரர் தேவாரப் பாடல்கள் அனைத்தும் 'அறியும் நெறி' என்ற தலைப்பில் ஆய்ந்து கோடற்குரியன. இறைவனிடத்து இடைவிடாப் பேரன்பு கொண்டால், அவனே தோன்றித் தன்னை வணங்கும் நெறியை அறிவுறுத்துவான்; துன்பத்தைப் போக்கியருள்வான். என்ற கருத்தொடு பாடியருளிய நிலையாய் நின்னடியே நினைந்தேன், (தி. 7 ப. 21 பா. 9) என்ற பாடல் நாயனாரால் காட்டப்பட்டுள்ளது. உயிர் விளக்கம்: உயிர் தன்னியல்பு நீங்கி ஞானம் அடைந்தவிடத்து அதனது வெற்றிப்பாட்டின் இயல்பு கூறும் அடிகள் பாடல்கள் உயிர் விளக்கம் என்ற பொருட்கீழ் அடங்கும் பெற்றியன. 'என்னதெழிலும்' (தி. 7 ப. 91 பா. 4) என்ற ஒற்றியூர்த் திருப்பாட்டும், 'கார்க்குன்ற மழையாய்' (தி. 7 ப. 59 பா. 3) என்ற ஆரூர்த் திருப்பாட்டும், 'ஆக்கும் அழிவும்' (தி. 7 ப. 4 பா. 7) என்ற அஞ்சைக்களத் திருப்பாட்டும் காட்டப்பட்டன. இறைவன் மழையாய் - ஆக்கம் அழிவு முதலிய அனைத்துமாய் உயிர்கட்கு அருள் புரியும் இயல்பு இவற்றால் அறியப்பெறும். இன்புறுநிலை: உயிர்க்குயிராய் உள்நின்றுணர்த்தி வரும் இறைவன் அருளாசிரியனாய் எழுந்தருளி, உயிரின் இயல்பை அறிவுறுத்த, பின் அம் முதல்வன் திருவடிகளை அணைந்து இன்புறும் நிலையினை 'இன்புறுநிலை' என்ற பொருளில் ஆராயலாம். 'மாவையுரித்து' எனத் தொடங்கும் கானப்பேர்ப் பாடல் மட்டும் எடுத்துக் காட்டப் பட்டது.3 இதனைப்போன்ற அனைத்தும் இப்பொருள் பற்றியனவேயாம். 'பாவகமின்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை' (தி. 7 ப. 84 பா. 7) என்ற தொடர் இன்புறு நெறி காட்டிய குறிப்பாம் எனலாம். அணைந்தோர்: அணைந்தோர் தன்மையைக் குறிக்கும் தேவாரப் பாடல்கள்;
|