744. | நீதியில் ஒன்றும் வழுவேன் | | நிர்க்கண் டகஞ்செய்து வாழ்வேன் | | வேதியர் தம்மை வெகுளேன் | | வெகுண்டவர்க் குந்துணை யாகேன் | | சோதியிற் சோதிஎம் மானை | | சுண்ணவெண் ணீறணிந் திட்ட | | ஆதி இருப்பதும் ஆரூர் அவர் | | எம்மையும் ஆள்வரோ கேளீர். | | 5 |
கு-ரை: நெறி முதலிய நான்கிலும் ஏதுப்பொருட்கண் வந்த ஐந்தனுருபு விரிக்க. தறி - தறித்தல்; முதனிலைத் தொழிற்பெயர். 5. பொ-ரை: தொண்டீர், யான், நீதியினின்றும் சிறிதும் வழுவேன்; அவ்வாறு வழுவுதலை முற்றிலும் களைந்து வாழ்வேன்; அந்தணர்களை வெறுக்கமாட்டேன்; வெறுக்கின்றவர்களுக்கும் துணை செய்பவனாகமாட்டேன். ஒளிக்குள் ஒளியாய் உள்ளவனும், எங்கட்கு யானை போல்பவனும், பொடியாகிய வெள்ளிய நீற்றை அணிந்த முதல்வனும் ஆகிய இறைவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின். கு-ரை: மேல், "நீதியும் நான்மிகப் பொல்லேன்'' என்று அருளிச் செய்து, இங்கு, ''நீதியில் ஒன்றும் வழுவேன்'' என்று அருளியது, ''ஆண்டு கொள்ளப்படாது ஒழிவேன்கொல்'' என ஆற்றாமையானும், ''ஆண்டுகொள்ளப்படுதல் கூடும்'' என ஆற்றுதலானுமாம். இவ்வாறு முரண வருவன பிறவற்றிற்கும் ஈது ஒக்கும். கண்டகம் - களைதல். 'நிர்' என்பது, துணிவுப் பொருண்மை தரும் வடமொழி இடைச்சொல். ''வேதியர்தம்மை வெகுளேன்'' என்றது, 'புறச்சமயங்களைச் சாரேன்' என்றபடி. எனவே, வேதநெறியில் உள்ளாருள் தலையாயவரை எடுத் தோதிப் பிறரையும் தழுவிக்கொண்டவாறாம். ஒளி, உயிரின் அறிவு. அவ்வறிவுக்கு அறிவாய் நிற்றலின், ''சோதியிற் சோதி'' என்று அருளினார். 'எம்மானை' என்றதன்பின், சகரவொற்று மிகுத் தோதுதல், பாடம் ஆகாமை யறிக. இறைவனை, 'அடியவர்கட்கு யானை' என்றல், அவர்களை எடுத்துச் சுமத்தல்பற்றி.
|