பக்கம் எண் :

1055
 
745அருத்தம் பெரிதும் உகப்பன்

அலவலை யேன்அலந் தார்கள்

ஒருத்தர்க் குதவியேன் அல்லேன்

உற்றவர்க் குந்துணை யல்லேன்

பொருத்தமேல் ஒன்றும் இலாதேன்

புற்றெடுத் திட்டிடங் கொண்ட

அருத்தன் இருப்பதும் ஆரூர் அவர்

எம்மையும் ஆள்வரோ கேளீர்.

6




கிடைக்கத் தகுமேநற் கேண்மையாற் கல்லால்
எடுத்துச் சுமப்பானை இன்று

- திருவருட்பயன் - 65

என்பது மெய்ந்நூல்.

6. பொ-ரை: தொண்டீர், யான், பொருளையே பெரிதும் விரும்புவேன்; அதன் பொருட்டு எங்கும் திரிதலையுடையேன்; துன்புற்றவர் ஒருவர்க்கேனும் உதவியுடையேனல்லேன்; உறவாயினார்க்கும் துணைவனல்லேன்; இன்ன பலவாற்றால், பொருந்துவதாய பண்பு எனிலோ, ஒன்றேனும் இல்லாதேனாயினேன். புற்றைப்படைத்து, அதனை இடமாகக் கொண்ட மெய்ப்பொருளாயுள்ளவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரேயன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.

கு-ரை: 'அலவு' என்பது அலைதலாகலின், ''அலவு அலை'' என்றது, 'அலைதலைச் செய்தல்' என்றதாம். ''அலந்தார்கள்'' என்றது, விகுதிமேல் விகுதி பெற்ற, உயர்வுப் பன்மைச் சொல்.

'ஒருத்தர்க்கும்' என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. இயல்பாய் இருந்த புற்றினை, எடுத்ததாக, பாற்படுத்தருளிச் செய்தார். ''எடுத்திட்டு'' என்றதில், இடு, துணைவினை. 'இட்டு' என்பது ஓர் அசைநிலை என்பாரும் உளர். திருவாரூர்த் திருமூலட்டானர், புற்றிடங் கொண்டு இருத்தலைக் காண்க.