750. | எந்தை இருப்பதும் ஆரூர் அவர் | | எம்மையும் ஆள்வரோ என்று | | சிந்தை செயுந்திறம் வல்லான் | | திருமரு வுந்திரள் தோளன் | | மந்த முழவம் இயம்பும் | | வளவயல் நாவல்ஆ ரூரன் | | சந்தம் இசையொடும் வல்லார் | | தாம்புகழ் எய்துவர் தாமே. | | 11 |
திருச்சிற்றம்பலம்
11. பொ-ரை: வெற்றித் திருப் பொருந்திய திரண்ட தோள்களையுடையவனும், மெல்லென ஒலிக்கும் மத்தளம் முழுங்குவதும், வளவிய வயல்களையுடையதும் ஆகிய திருநாவலூரில் தோன்றியவனும் ஆகிய நம்பியாரூரன் 'எம் தந்தையாகிய இறைவன் என்றும் எழுந்தருளியிருக்கும் இடமும் இத் திருவாரூரே யன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ' என்று அடியார்களோடு ஆராயும் திறம் வல்லனாய்ப் பாடிய இந்த இசைப் பாடல்களை, அவ்விசையொடும் பாட வல்லவர் புகழ் பெறுவர். கு-ரை: 'அடியார்களோடு' என்பது, ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. 'வல்லானாய்' என எச்சப்படுத்து, 'பாடிய' என்பது வருவித்து முடிக்க. ''திருமருவும்'' என்றது தொடுத்து, ''ஆரூரன்'' என்றது காறும் உள்ளவற்றை, முதற்கண் வைத்துரைக்க. அரசத்திருவும் உடைமையின், ''திருமருவும் திரள் தோளன்'' என்று அருளினார். 'சந்தம்' என்றது ஆகுபெயர். புகழ், ஈண்டு அடியவர் போற்றும் புகழாதலின், 'அதனை எய்துவர்' எனவே, இறைவனுக்கு உரியவராதல் தானே பெறப்பட்டது.
|