பக்கம் எண் :

1069
 

குடியிலும் வீற்றிருக்கின்ற தலைவருக்குச் சேர்ப்பித்த இப்பாடல்களை, தங்கள் கையால் தொழுது, தங்கள் நாவிற் கொள்பவர்கள், தவநெறிக் கண் சென்று, பின்னர்ச் சிவலோகத்தை ஆள்பவராதல் திண்ணம்.

கு-ரை: "கூறுகந்து" "ஏறி" என்ற எச்சங்கள் எண்ணின்கண் வந்தன. "மாறலார்" என்றது, 'மாறல்' என்னும் தொழிற்பெயரடியாக வந்த பெயர். 'மாற்றலார்' எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். "அங்கையான்" என்று அருளினார், மேருவை வில்லாக ஏந்தி நின்றமைபற்றி. "அறியான், அடியவன்" என்றவை முற்றெச்சங்கள்; அவை, "தொழுவன்" என்ற, ஆக்கச்சொல் தொக்க வினைக்குறிப்புப் பெயரொடு முடிந்தன. பாடலை நாவின் மேற் கொள்ளுங்கால், கையால் தொழுது கோடல் வேண்டும் என்க. இதனால், திருமொழிகளது பெருமை உணர்த்தியருளப்பட்டது. "தவநெறி சென்று ஆள்பவர்" என்றமையால், அமருலகம், சிவலோகமாயிற்று. ஏகாரம், தேற்றம்.

ஏயர்கோன் கலிக்காமர் புராணம்

மிக்கபுனல் தீர்த்தத்தின் முன்னணைந்து வேதமெலாம்
தொக்கவடி வாயிருந்த துருத்தியார் தமைத்தொழுது
புக்கதனின் மூழ்குதலும் புதியபிணி யதுநீங்கி
அக்கணமே மணியொளிசேர் திருமேனி ஆயினார். 299

கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடைபுனைந்து
மண்டுபெருங் காதலினால் கோயிலினை வந்தடைந்து
தொண்டரெதிர் மின்னுமா மேகமெனும் சொற்பதிகம்
எண்டிசையும் அறிந்துய்ய ஏழிசையால் எடுத்திசைத்தார். 300


-தி. 12 சேக்கிழார்