75. திருவானைக்கா பதிக வரலாறு: சுவாமிகள், திருமழபாடியீசரைத் தொழுது, பொன்னிக் கரையின் இருமருங்கும் உள்ள தலங்களைச் சென்று வணங்குங்கால், திருவானைக்காவை யணைந்து பெருமானைத் தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 75) இத்திருப்பதிகத்தில், மணியாரம் பொன்னியில் வழுவிப் போயதற்கு வருந்திய உறையூர்ச் சோழனது வருத்தம் நீங்க, அம் மணியாரத்தைத் திருமஞ்சனக்குடத்துள் புகச் செய்து பெருமான் அணிந்துகொண்ட திறத்தை வியந்து அருளிச்செய்தது அறியத் தக்கது. குறிப்பு: இத் திருப்பதிகம், இறைவரிடத்தெழுந்த அன்பின் மிகுதியால், 'அவர்க்குத் தொண்டுபடுவார், எமக்கும் தலைவராவார்' என்று அடியவர் பலருங்கேட்க அருளிச்செய்தது. 'ஒருவருக்கு இறைவரிடத்து உள்ள அன்பின் அளவு, அவர் அடியவரிடத்து உண்டாகும் அன்பின் அளவானே அறியப்படும்' என்பதனை, "ஈசனுக்கன்பில்லார் அடியவர்க்கன்பில்லார்" (சிவஞான சித்தி. சூ. 12-2) என எதிர்மறை முகத்தான் உணர்த்தப்பட்ட உண்மைக்கு அனுபவம், இத்திருப்பதிகத்துள் வெளியாதல் அறிக. இதனானே இத்திருப்பதிகத்தை, 'நிறையுங் காதலுடன் எடுத்த திருப்பதிகம்' என்று அருளினார் சேக்கிழார். (தி. 12 ஏயர்கோன். புரா. 75) பண்: காந்தாரம் பதிக எண்: 75 திருச்சிற்றம்பலம் 761. | மறைக ளாயின நான்கும் | | மற்றுள பொருள்களும் எல்லாத் | | துறையும் தோத்திரத் திறையும் | | தொன்மையும் நன்மையும் ஆய |
1. பொ-ரை: வேதங்கள் நான்கும் மற்றைய பொருள்களும், பல சமயங்களும், அவற்றில் புகழ்ந்து சொல்லப்படும் கடவுள்களும், இவை அனைத்திற்கும் முன்னேயுள்ள முதற்பொருளும், வீடுபேறும் என்கின்ற இவை எல்லாமாய் நிற்கின்ற ஒலிக்கும் அழகிய நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, 'இவனே முதல்வன்' என்று அறிந்து, நாள்தோறும் அடிபணிகின்றவர்,
|