பக்கம் எண் :

108
 

"நற்றவா உனைநான் மறக்கினும் சொல்லுநா நமச்சிவாயவே"

(தி. 7 ப. 48 பா. 1)

என்றெல்லாம் வருவன ஐந்தெழுத்தருள் நிலையில் ஆராய்ந்து கோடற்குரியன.

அரும்பொருள்; அருந்துணை:

சுந்தரர் தேவாரத்தினை இவ்வாறு பல நிலைகளில் ஆராய்ந்தால் பெறும் பயன்கள் பல. அவை பெருமான் திருவுள்ளத்தை நன்கறிந்து கொள்ளப் பெரிதும் உதவும். அந்த நிலையினைத் தமிழ்ச் சான்றோர் பன்னூறாண்டுகளுக்கு முன்னேயே ஆழ்ந்தறிந்தனர்; அந்நெறிநின்றால் பல உண்மைகளைத் தெளிந்து கொள்ளலாம். இப்பொருளாராய்ச்சியிற் புலனாகும் உண்மை நெறி திருமுறையாராய்ச்சியில் நற்றுணைபுரியும் என்பது உறுதி.

சுந்தரர் செந்தமிழ் தன்னை ஆய்வோர் மருள் தம்மை யெல்லாம் நீக்கி ஒளி காட்டி, வாரா உலக நெறியேற வழிகாட்டுவது என்பது நம்பியாண்டார் நம்பிகளின் கருத்து. 'ஆளான பிறகு இனி அல்லேன் எனல் ஆமே' என்று கூறும் அடிகள் வாக்குச் சிந்தித்தற்குரிய செம்மை உடையதாகும். நம்பியாண்டார் நம்பிகள் திருவாக்கு பின்வருவது :

அருட்டுறை அத்தர்க்கு அடிமைப்பட்டேன் இனி

அல்லன்என்னும்

பொருட்டுறை யாவதென் னேயென்ன

வல்லவன் பூங்குவளை

இருட்டுறை நீர்வயல்நாவற் பதிக்கும்

பிரான் அடைந்தோர்

மருட்டுறை நீக்கிநல் வான்வழி காட்டிட

வல்லவனே.

(தி. 11 திருத்தொண். பா. 16)

அரிது சிந்தித்துக் கொளத்தக்க அரும்பொருளுடைமையின் இவரது செந்தமிழை, "பந்திப்பரியன செந்தமிழ்" என்று நம்பிகள் விரித்துரைப்பர். 'பந்திப்புக்கு அரியன' எனவே ஆய்ந்து கோடற் கேற்ற அருநிலை உடையது அது எனல் அவர் கருத்தாதல் விளங்கும்.

இருநிலை விளக்கம்:

திருமுறைகளைக் கற்றுத் தெளிதல் வாழ்வின் அக நிலைக்குத்