774. | சள்ளை வெள்ளையங் குருகு | | தானது வாமெனக் கருதி | | வள்ளை வெண்மலர் அஞ்சி | | மறுகிஓர் வாளையின் வாயில் | | துள்ளு தெள்ளுநீர்ப் பொய்கைத் | | துறைமல்கு வாஞ்சியத் தடிகள் | | வெள்ளை நுண்பொடிப் பூசும் | | விகிர்தம்ஒன் றொழிகிலர் தாமே. | | 4 |
ஒருவனாகிய அருச்சுனனது திரண்ட தோள்மீது பல கூரிய அம்புகளை அழுத்தி, தாம் கட்டுகின்ற பெரிய மாணிக்கத்தை உடைய கச்சு, ஒரு பக்கத்திலே பல தலைகளையுடையதாய் இருக்கின்றது; இது வியப்பு! கு-ரை: புத்தன் போதனையால் சிவநெறியை இகழ்ந்தொதுக் கினராகலின், திரி்புரத்தவரை, "தூர்த்தர்" என்று அருளினார். 'மூன்று ஊர்களை அழித்தற்கு ஓர் அம்பையே விடுத்தவர், ஒரு தனி மகனை வெல்வதற்குப் பல அம்புகளை விடுத்தமையும், கச்சில் ஒரு பக்கத்தில் பல தலைகள் இருத்தலும், மற்றொரு பக்கத்தில் ஒரு தலையேனும் இல்லாமையும் இவையெல்லாம் ஒன்றோடும் பொருந்தாதனவாய் உள்ளன என்றபடி. "தலை" இரண்டனுள் முன்னது பக்கத்தையும் பின்னது அழகு சிறக்கக் கைவன்மைபடச் செய்யும் கச்சிற்புனைவையும் குறித்தன. அப்புனைவு இருபக்கமும் அமைந்து விளங்குவதே கச்சிற்குப் பொருந்துவதாம். ஐந்தலை நாகமே இறைவர்க்குக் கச்சாகலின், அஃது ஒரு பக்கம் பல தலைகளையும், மற்றொரு பக்கம் தலை இன்மையையும் உடைத்தாயிற்று. 'ஒரு தலையிலே பல தலைகளையுடையது' என்பது நயம். 'ஒருதலை, துணிவு' என்பாரும் உளர். 'எய்து, பாய்ச்சி' என, எண்ணின்கண் வந்த வினையெச்சங்கள். "சாத்தும்" என்றதனோடு முடிந்தன. 'பொய்கை திகழ்' எனப் பாடம் ஓதுதலுமாம். 4. பொ-ரை: 'சள்ளை' என்னும் மீன், வள்ளைக் கொடியின் வெண்மையான மலரை, வெண்மையான குருகு என்று கருதி அஞ்சிச் சுழன்று, பின், வாளைமீனின் வாயிலே சென்று துள்ளுகின்ற, தெளிவாகிய நீரையுடைய பொய்கைத் துறைகள் நிறைந்த திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர், வெள்ளிய, நுண்ணிய சாம்பலைப் பூசுகின்ற வேறுபாடொன்றனை எஞ்ஞான்றும் ஒழியாதே உடையர்.
|