பக்கம் எண் :

1086
 

77. திருவையாறு

பதிக வரலாறு:

சுவாமிகள், சேரமான் பெருமாள் நாயனாருடன் மலை நாட்டுக்குச் செல்லும் பொழுது, திருக்கண்டியூர் வணங்கி வெளியே வரும் பொழுது திருவையாறு எதிர்தோன்ற, சேரமான் பெருமாள் நாயனார் அங்குச் சென்று இறைவரைப் பணிய வேண்டுமென்று கூறுதலும் ஓடம் முதலியவை செல்லாதபடி காவிரியில் பெருவெள்ளம் சென்றதைக் கண்டு பாடியருளியது இத்திருப்பதிகம். ஒவ்வொரு பாடல் இறுதியிலும், "ஐயாறுடைய அடிகேளோ" என்று அழைத்துப் பாடியிருத்தல் காணலாம். (தி. 12 கழறிற். புரா. 134)

குறிப்பு: இத் திருப்பதிகம் நுதலிய பொருள், இதன் வரலாற்றானே விளங்கும்.

பண்: காந்தார பஞ்சமம்

பதிக எண்: 77

திருச்சிற்றம்பலம்

781.பரவும் பரிசொன் றறியேன்நான்

பண்டே உம்மைப் பயிலாதேன்

இரவும் பகலும் நினைந்தாலும்

எய்த நினைய மாட்டேன்நான்

கரவில் அருவி கமுகுண்ணத்

தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை

அரவந் திரைக்கா விரிக்கோட்டத்

தையா றுடைய அடிகேளோ!

1



1. பொ-ரை: கரவின்றி வருகின்ற நீர்ப்பெருக்குக் கமுகங் குலையை விழுங்க, தென்னை மரங்களின் குலைக்கீழ் உள்ள கரும்பாலைகளின் ஓசையோடே கூடி ஒலிக்கின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள், யான் உம்மைத் துதிக்கும் முறையை இயற்கையில் சிறிதும் அறியாதேன் ஆகலின், முன்னமே உம்பால் வந்து வழிபடாதொழிந்தேன்; இரவும் பகலும் உம்மையே நினைவேன்; என்றாலும், அழுந்த நினையமாட்டேன்; ஓலம்!