793. | பறியேசுமந் துழல்வீர்பறி | | நரிகீறுவ தறியீர் | | குறிகூவிய கூற்றங்கொளு | | நாளால் அறம் உளவே | | அறிவானிலும் அறிவான்நல | | நறுநீரொடு சோறு | | கிறிபேசிநின் றிடுவார்தொழு | | கேதாரமெ னீரே. | | 2 |
தந்தது. பறி - பை; அது பை போல்வதாகிய உடம்பைக் குறித்தது. அதனை வருகின்ற திருப்பாடலிலுங்காண்க. 'பறிதான் வாழ்வாவது' என மேலே கூட்டுக. ''தான்'' என்பது, அசைநிலை. 2. பொ-ரை: வேறொன்றும் செய்யாது உடம்பைச் சுமந்தே திரிகின்றவர்களே, இவ்வுடம்பு நரிகளால் கிழித்து உண்ணப்படுவதாதலை அறிகின்றிலீர்; குறித்த நாளில் உம்மை அழைத்தற்குக் கூற்றுவன் நினைக்கின்ற நாளில் உமக்கு அறங்கள் உளவாகுமோ? ஆகாவாகலின், இப்பொழுதே, அறிய வேண்டுவனவற்றை அறியும் வானுலகத்தவரினும் மேலான அறிவுடன், நல்ல நறுமணத்தையுடைய நீரையும், சோற்றையும் விருந்தினருக்கு, இன்சொற் பேசி இடுகின்றவர்கள் வணங்குகின்ற, 'திருக்கேதாரம்' என்று சொல்லுமின்கள். கு-ரை: ''கூவிய'' என்றது, 'செய்யிய' என்னும் வினையெச்சம். அது, ''கொளும்'' என்றதனோடு முடிந்தது, கொள்ளுதல் - மனத்துட் கொள்ளுதல். ''நாளால்'' என்றது, வேற்றுமை மயக்கம். ''உளவே'' என்ற ஏகாரம், வினா. வானின் உள்ளாரை, ''வான்'' என்று அருளினார். அவர் அறிவது, துறக்க இன்பத்தையேயாகலின், அதனை விரும்பாது, வீட்டின்பத்தை விரும்புவாரை, அவரினும் மேலாய அறிவுடையவராக அருளினார். இனி, ''அறிவானிலும் அறிவான்'' என்றதற்கு, 'அறிகின்ற உயிரின்கண்ணும் அறிவாய் இருந்து அறிபவன்' என. இறைவற்கு ஆக்கி உரைப்பாரும் உளர். விலாமிச்சை வேர் முதலியன இடப்படுதலின், நீர், நறுமணம், உடையதாயிற்று. ''கிறி'' என்றது, மகிழ்வுரைகளை.
|