உ சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 3 புராண வரலாற்றுக் குறிப்புக்கள் சிரோமணி, வித்துவான் வி. சபேசன், தமிழ் பேராசிரியர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி. உலகம் தோன்றிய நாள்முதல் இன்றுவரையுள்ள பழமையான வரலாறுகளைச் சிந்திப்பதால் பல உண்மைகள் நமக்குப் புலப்படுதல் கண்கூடு. இவ்வரலாறுகளுள் இறைவனருள் விளையாடல்களைத் தெரிவிக்கும் புராணச் செய்திகள் நம் உள்ளம் பண்படுவதற்கும் உயிர் உறுதியடைவதற்கும் துணை செய்வன என்று கூறலாம். புராணம் என்ற சொல்லுக்குப் பழமையானது என்பது பொருள். இச்சொல் புராதனம் என்பதன் திரிபு. புராணவரலாறுகள் இறைவன் உயிர்கள் மேல் வைத்துள்ள பெருங்கருணைத்திறத்தைப் புலப்படுத்துகின்றன. இறைவன் திருவருளைப் பெறும் வேட்கையை நமக்குத் தூண்டுகின்றன. சுந்தரர் தேவாரத்தில் எடுத்தாளப்பெற்றுள்ள புராண வரலாறுகளை ஒருவாறு தொகுத்துக்காண்பது பயன்தரும் பணியாகும். புராண வரலாறுகளைத் தத்துவ உணர்வோடும், இறைவனது அருளாற்றலை விரித்துரைப்பன இவ்வரலாறுகள் என்ற எண்ணத்தோடும், நம்பிக்கையோடும் நாம் அணுகவேண்டும். புராண வரலாறுகளைக் குறிக்குந் தொடர்களின் பொருளறிந்து வரலாறு தெரிந்து ஓதினால் நம் மனம் கனிவுறும். இறைவன் பால் அன்பு ஊற்றெடுத்துப்பாயும். உள்ளம் பண்படும் என்பது ஒரு தலை. 'பிறைசூடீ' என்று இறைவனை விளிக்கும்போது அடைக்கலமாக இறைவன் திருவடிகளையடைந்த சந்திரனைச் சடைமுடியில் சூடிக்காத்த இறைவன் கருணையை எண்ணுகின்றது நம் மனம். "அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத அவனைக்காப்பது காரணமாக வந்த காலன்தன் ஆருயிரதனை வவ்வினாய்" என்ற தொடரை ஓதும்போது தன்பாலன்புகொண்ட அடியார்க்கு இறைவ
|