னருள் புரியும் வள்ளன்மை நம் நினைவிற்கு வரும். இவை போன்ற வரலாறுகள் நம் சிந்தனைக்கு வருவதால் எவ்வாறு நாம் பக்தி செலுத்தவேண்டும் என்ற எண்ணமும் உடன்வருதல் இயற்கை. இக்கட்டுரையில் ஏனைய திருமுறைகளில் இதுவரை வெளிவந்துள்ள வரலாறுகள் குறிக்கப்பெற்றில. மேலும் சுந்தரர் நாயன்மார்களின் வரலாறுகளைத் திருத்தொண்டத் தொகையில் குறித்துள்ளார். திருத்தொண்டத் தொகையில் குறிக்கப்பெற்ற அடியார்களின் வரலாறுகள் பெரியபுராணமாக விரிந்துள்ளன. ஆகையால் சுந்தரர் தம் திருப்பதிகத்தில் எடுத்தாண்ட நாயன்மார்களின் வரலாறுகளையே இக்கட்டுரையில் தருகின்றோம். அகத்தியர் பொதியமலையை யடைந்தது1 சிவபெருமான், பார்வதியை மணக்க இமயமலைக்கு எழுந்தருளினான். பெருமானின் திருமணக்கோலத்தைக் காண எல்லாப் புவனங்களில் உள்ளவர்களும் வந்து கூடினர். அதனால் இமயமலை நடுங்கியது; உயிர்கள் அஞ்சின; வடபக்கம் தாழ்ந்தது; தென்பக்கம் உயர்ந்தது. இரண்டையும் சமன் செய்யப் பெருமான், அகத்தியரை அழைத்து, 'நீ தெற்கேயுள்ள பொதியமலையை யடைந்து தங்கினால் தெற்கு உயர்ந்தும், வடக்கு தாழ்ந்தும் இருக்கும் நிலை மாறும். உயிர்களின் அச்சமும் நீங்கும்' என்று திருவாய் மலர்ந்தருளினான். அகத்தியர், 'பெருமானின் திருமணக் கோலத்தைக் காணவியலாதே' என்ற தமது வருத்தத்தைப் பெருமானிடம் விண்ணப்பித்தார். பெருமானும், 'நாம் நமது திருக்கல்யாணக் கோலத்தை அங்கு உனக்குக் காட்டுவோம்' என்றும் அருளினார். அதனால் மகிழ்ந்த அகத்தியர் இறைவன் திருவடிகளை வணங்கி, விடைபெற்றுப் பொதிய மலையை யடைந்தார். வடபகுதியும் தென்பகுதியும் சமமாயின. அங்குப் பெருமான் தமது திருக்கல்யாணக் கோலத்தோடு எழுந்தருளி அருள் வழங்கினான். சந்தி மூன்றிலுந் தாபர நிறுத்திச் சகளி செய்திறைஞ் சகத்தியன் றனக்குச் சிந்து மாமணி யணிதிருப் பொதியிற் சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்.
(தி. 7 ப. 65 பா. 5)
1. கந்தபுராணம் - திருக்கல்யாணப் படலம்.
|