என்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாக்கில் அகத்தியருக்கு அருளிய குறிப்பு உளது. அடி முடி தேடியது: 1 நான்முகனுக்கு ஆயிரம் சதுர்யுக காலம் பகற்காலமாயும் ஆயிரம் சதுர்யுக காலம் இரவுக் காலமாயும் உள்ளன. இரவுக் காலத்தில் நான்முகன் துயில் கொள்ள, இந்திரன் முதலாகிய தேவர்களும், உயிர்க் கூட்டங்களும், உலகமும் அழிந்தன. கடல், உலகம் முழுவதையும் சூழ்ந்தது. அக்காலத்தில் திருமால் சிவபெருமானை எண்ணி ஆலிலையில் துயில் கொண்டிருந்தார். சனலோக முனிவர்கள் திருமாலைத் துதித்தனர். திருமாலும் துயில்நீங்கிப் பூவுலகம் பாதாளத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு, பன்றி வடிவெடுத்து அதனை மீட்டுவந்து முன்போல நிறுத்தினார். நான்முகனும் இரவுப் பொழுது நீங்கியதால் விழித்தெழுந்து, தமது படைத்தற்றொழிலை மேற்கொண்டு உலகை முன்போல் உண்டாக்கினான். அதனால் செருக்குக்கொண்ட நான்முகன் தன்னால்தான் உலகம் உண்டாக்கவும் அழிக்கவும்படுகிறது என்று எண்ணியவனாய்த் திருமாலிடம் சென்று, 'நீ யார்' என்று வினவி, அவரிடம் தானே பரப்பிரமம் என்று தெரிவித்தான். திருமாலும், "நானே உன் தந்தை, தாய், தெய்வம், குரு யாவும் ஆவேன்; உருவமாயும், அருவமாயும் ஆதியாயும், சோதியாயும் யானே உள்ளேன்" என்றார். இதனால் இருவருக்கும் போர் மூண்டது. இருவரும் விட்ட சிவப்படைகளால் பல உயிர்த் தொகைகள் அழிந்தன. தேவர்கள் அஞ்சிக் கயிலையை அடைந்தனர். அப்பொழுது மாசித்திங்கள் அமரபக்ஷ சதுர்த்தசி திதியில் நள்ளிரவில் சிவபெருமான் இருவருக்கும் இடையில் சோதி வடிவாய்த் தோன்றி "நீங்கள் இந்தச் சோதி மலையின் அடியையும் முடியையும் காண்பீராக" என்றருளினார். அதனைக் கேட்டும் ஆணவம் நீங்காதவராய் இதன் அடி முடிகளைக் காண்பவரே முழுமுதற் கடவுள் என்று முடிவு செய்து, திருமால் அடியைக் காணப் பன்றியுருவில் கீழ் உலகத்திலும், நான்முகன் முடியைக் காண அன்னப்பறவையின் வடிவில் மேல் உலகத்திலும் புறப்பட்டனர். இருவரும் பலகாலம் தேடியுங் காண முடியாமல் வலிமையிழந்து வருந்தினர். பின்பு சிவபெருமான் அருளால் வலிமை பெற்றுப்
1. கந்தபுராணம் - அடி முடி தேடு படலம்.
|