பூமியை யடைந்து ஆணவம் நீங்கிச் சிவனை வழிபட்டனர். இதனைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள், "பண்டைய மால்பிரமன் பறந்தும் மிடந்தும் மயர்ந்தும் கண்டிலராய் அவர்கள் கழல் காண்பரிதாய பிரான்" (தி. 7 ப. 20 பா. 9) என்றும் மேலும் பலவிடங்களிலும் (தி. 7 ப. 13 பா. 10, ப. 58 பா. 8, ப. 73 பா. 9) கூறியிருத்தல் காண்க. அந்தகாசுரனை அழித்தது: 1 இரணியாட்சன் மகன் அந்தகாசுரன். இவன் இறைவனை வழிபட்டு வரம் பெற்றுத் திருமால் முதலிய தேவர்களைப் புறங்கண்டு உலகை ஆண்டுவந்தான். தேவர்கள் அவனுக்குப் பயந்து பெண் வடிவங்கொண்டு கயிலையில் இறைவியின் கணங்களோடு வாழ்ந்திருந்தனர். அப்பொழுது சிவபெருமான் தாருகாவனத்து முனிவர்களைச் சோதிக்கச் சென்றான். அந்தகாசுரன் இதையறிந்து கயிலையில் போருக்குவர, திருமால் அம்பிகையின் திருவருள்பெற்று, அனேக பெண்களையுண்டாக்கி அனுப்பினார். அந்தகாசுரன் அவர்களுக்குத் தோற்று ஓடினான். பெருமான் திருக்கயிலையையடைந்த பின்னர், அந்தகாசுரன் தன்னைத் தோற்கடித்த பெண்களைப் பிடித்து வருதல் வேண்டுமென எண்ணி, கயிலையையடைந்தான். அதையறிந்த தேவர்கள் வேண்டுகோளால் சிவபெருமான் வயிரவமூர்த்தியை யனுப்பினான். அவர் சென்று அவனைச் சூலத்தில் கோர்த்து நடனம் செய்தார். அந்தகாசுரன் அறிவு பெற்றவனாய் சூலத்தின்மேலிருந்தே சிவபெருமானைத் துதித்தனன். வயிரவமூர்த்தியும் மகிழ்ந்து அவனைச் சிவகங்கையில் முழுகுவித்து, திருவருளையளித்துப் பாசத்தை நீக்கினர். இவ் வரலாற்றை நாயனார், "இருள்மேவும் அந்தகன்மேல் திரிசூலம் பாய்ச்சி"
(தி. 7 ப. 16 பா. 2) "செறுத்தீர் அழற் சூலத்தில் அந்தகனை" (தி. 7 ப. 9 பா. 2) என்று பல இடங்களில் கூறியிருத்தல் கருதத்தக்கது.
1. காஞ்சிப் புராணம் - அந்தகேசப் படலம்.
|