பக்கம் எண் :

114
 

அம்பிகை அறம் வளர்த்தது: 1

திருக்கயிலையில் இறைவனும் இறைவியும் மகிழ்ச்சியோடிருக்குங்கால், ஒருநாள் அம்மையார் விளையாட்டாக, சிவபெருமானது திருக்கண்களை மூடியதால் உலக முழுதும் இருள் மூடிக் கொண்டது. அதனால் படைப்புமின்றி, கடவுட் பூசை முதலிய அறங்களும் ஒழிந்தன. அம்மையார் கைகளை வாங்கிக் கொள்ள இறைவன் விழி திறப்ப முன்போல் உலகம் ஒளி பெற்றுச் சிறந்தது. பின்னர்ச் சிவபெருமான் உமையம்மையாரை நோக்கி, நீ நமது கண்களை மூடி வாங்கிய சிறு பொழுது உலகிற்குப் பல்லூழியாக உயிர்கள் வருந்தி அறங்கள் தடைப்பட்டன. அப்பாவம் நீங்க நீ பிராயச்சித்தம் செய்தல் வேண்டும், எமக்கும் அடியார்களுக்கும் பாவம் அணுகா தாயினும் நாம் இயற்றிய வழியை உலகம பின்பற்றி நடக்கு மாதலால் நீ செய்தல் வேண்டும் எனவும், காசி, காஞ்சி இவ்விரண்டு தலங்களே கருமபூமியில் உயர்ந்தன எனவும் அருளினார்.

அங்ஙனமே, அம்மையார் காசியை அடைந்து ஸ்ரீ விசுவேசுவரரைப் பூசித்து, வேறோர் இலிங்கம் தாபித்து வழிபட்டுக் காஞ்சியையடைந்து, ஸ்ரீ கங்கணேசர், ஸ்ரீ கடகேசர் என்ற இலிங்கங்களை அமைத்து வழிபட்டு, அகநகரை யடைந்தார். அங்கு உலகாணித் தீர்த்தத்தின் கரையில் பிலாகாசத்தையடைந்து தங்கி, அறச்சாலை செய்து முப்பத்திரண்டு தருமங்களையும் வளர்த்தார்.

இவ் வரலாற்றை, சுந்தரமூர்த்தி சுவாமிகள்,

"தாரிருந் தடமார்பு நீங்காத் தையலாள் உலகுய்ய வைத்த
காரிரும் பொழிற்கச்சி மூதூர்க் காமக்கோட்டம் உண்டாக நீர்போய்
ஊரிடும் பிச்சை கொள்வ தென்னே"

(தி. 7 ப. 5 பா. 6)

என்று அருளியிருத்தல் காண்க.

அம் முப்பத்திரண்டு அறங்களாவன : (1) தேவயாகம், (2) பிதிர்யாகம், (3) பூதயாகம், (4) மானிடயாகம், (5) பிரமயாகம், (6) வறியார்க்கு ஈகை, (7) துறந்தவர்க்கு மடம், (8) இல்வாழ்வார்க்கு இல்லம், (9) இல்வாழ்க்கைக்குரிய கருவிப்பொருள்கள், (10) தண்ணீர்ப்பந்தல், (11) பூஞ்சோலை, (12) யாசிப்பவர், குருடர்


1. காஞ்சிப்புராணம் - தழுவக் குழைந்த படலம்