பக்கம் எண் :

1124
 
821.கரையார்கடல் சூழ்ந்தகழி

மாதோட்டநன் னகருள்

சிறையார்பொழில் வண்டியாழ்செயுங்

கேதீச்சரத் தானை

மறையார்புகழ் ஊரன்னடித்

தொண்டன்னுரை செய்த

குறையாத்தமிழ் பத்துஞ்சொலக்

கூடாகொடு வினையே.

10

திருச்சிற்றம்பலம்


"மூவர்" என்றது. அதிகாரநிலை, 'அயன், மால், உருத்திரன்' என மூன்றென்பாரது கருத்துப்பற்றியும், "இருவர்" என்றது, அஃது, 'அயன், மால்' என இரண்டே என்பாரது கருத்துப்பற்றியுமாம். "தேவன்" என்றது. அதிகார நிலைக்கு மேற்பட்ட போக நிலையையும், உண்மை நிலையையும் குறித்தவாறாயிற்று. இங்ஙனம், அவரவர் கருத்துப்பற்றி இறைவன் பல்வேறு நிலையினனாய் நின்று ஆட்கொள்ளுதலை.

"நானாவித உருவாய் நமைஆள்வான்"

(தி. 1 ப. 9 பா. 5)

என்று ஞானசம்பந்தரும் அருளிச்செய்தார். அவ்விடத்தும், "நமை" என்றது உயிர்கள் பலவற்றையும் குறித்து நிற்றல் அறிக.

10. பொ-ரை: கறுப்பு நிறம் பொருந்திய கடல் சூழ்ந்த, கழியையுடைய, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தின்கண் உள்ள, சிறகுகள் பொருந்திய வண்டுகள் யாழிசைபோலும் இசையை உண்டாக்குகின்ற சோலைகளையுடைய திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அவனது அடிக்குத் தொண்டனாகி, வேதத்தைச் சொல்லுகின்ற, புகழையுடைய நம்பியாரூரன் பாடிய, குறைதல் இல்லாத இத் தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட, கொடியனவாகிய வினைகள் வந்து பொருந்தமாட்டா.

கு-ரை: "பொழில்" என்றதனை, "செயும்" என்றதன் பின் கூட்டியுரைக்க. "மறை" என்றது, வேதத்தையும், திருப்பதிகத்தையும் எனவும், 'ஆர்க்கும்' என்றது, ஓதுதலையும், அருளிச்செய்தலையும் எனவும் இவ்விரு பொருள் கொள்க. குறையாமை, புகழினுடையது. அது, மிகுவதனைக் குறிப்பதாம்.