பக்கம் எண் :

1125
 

81. திருக்கழுக்குன்றம்

பதிக வரலாறு:

நம்பியாரூரர், திருநாவலூர் சென்று தொழுது, பல பதிகளையும் வணங்கிக்கொண்டு, தொண்டைநாட்டில் திருக்கழுக்குன்றத்தில் அடியவர்கள் எதிர்கொள்ளச் சென்று பணிந்து பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 173)

குறிப்பு: இத்திருப்பதிகம் திருக்கழுக்குன்றத்தில் இறைவரை வணங்கிப் பெற்ற இன்பமீதூர்வால், அவ்வின்பத்தினை அனைவரும் பெறுமாறு அறிவுறுத்து அருளிச்செய்தது.

பண்: நட்டபாடை

பதிக எண்: 81

திருச்சிற்றம்பலம்

822.கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே
நின்ற பாவ வினைகள் தாம்பல நீங்கவே
சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடம்
கன்றி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.

1


1. பொ-ரை: உலகீர், தேவர்களுக்குத் தலைவனாகிய சிவபெருமானது இடம், பிடியானைகள் தங்கள் கன்றுகளோடு சூழ்ந்திருக்கும் தண்ணிய திருக்கழுக்குன்றமே; அதனை, பிற உயிர்களை வருத்து மாற்றாற் செய்த கொடுஞ்செயல்களால், பலரும் பல இகழுரைகளைச் சொல்லுமாறு இழிவெய்த நின்ற பாவமாகிய வினைகள் பலவும் நீங்குதற்பொருட்டுப் பலகாலும் சென்று வணங்குமின்கள்.

கு-ரை: "கொன்று" என்னும் வினையெச்சம், 'ஓடி வந்தான்' என்பதில், 'ஓடி' என்பதுபோல், "செய்த" என்றதற்கு அடையாய் நின்றது. "கொன்று" என்றது, கொல்லுதலையேயன்றி, கொன்றாற் போலத் துன்பஞ் செய்தலையுங் குறித்தது. புண்ணியமும், பாவமும் என வினைகள் இரண்டாகலின், "பாவ வினைகள்" என்று அருளினார்.