823. | இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே | | பிறங்கு கொன்றைச் சடையன் எங்கள் பிரானிடம் | | நிறங்கள் செய்த மணிகள் நித்திலங் கொண்டிழி | | கறங்கு வெள்ளை அருவித் தண்கழுக் குன்றமே. | | 2 |
824. | நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால் | | ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத் | | தோளும் எட்டு முடைய மாமணிச் சோதியான் | | காள கண்டன் உறையுந் தண்கழுக் குன்றமே. | | 3 |
2. பொ-ரை: உலகீர், விளங்குகின்ற, கொன்றை மாலையை அணிந்த சடையையுடைய எங்கள் பெருமானது இடம், பல நிறங்களையும் காட்டுகின்ற மணிகளோடு, முத்தினையும் தள்ளிக் கொண்டு பாய்கின்ற, ஒலிக்கும் வெண்மையான அருவிகளையுடைய, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே; அதனை, தலைவணங்கிச் சென்று, இனிய இசைகளைப் பாடி வழிபடுமின்கள். கு-ரை: 'இன்னிசை பாடவே' என்பதும் பாடம். 'பிறங்கு சடையன்' என இயையும். "நிறம்" என்ற பொதுமையால், பல நிறங்களும் கொள்ளப்பட்டன. முத்தின் சிறப்புப் பற்றி, அதனை வேறாக ஓதியருளினார். 3. பொ-ரை: உலகீர், நம்மை ஆளுகின்ற நம் வினைகள் குறைந்து, முழுதும் ஒழிதற்பொருட்டு, தோள்கள் எட்டினையும் உடைய, சிறந்த மாணிக்கம்போலும் ஒளியை யுடையவனாகிய, நஞ்சணிந்த கண்டத்தை உடையவன் எழுந்தருளியிருக்கின்ற, குளிர்ந்த திருக்கழுக்குன்றத்தை, நாள்தோறும், முறைப்படி, நெடிது நின்று வழிபடுமின்கள். கு-ரை: 'நம்ம' என்றதில் மகர ஒற்று, விரித்தல். 'கண்டத்தில் நஞ்சே யன்றித் தோளும் எட்டு உடையான்' என்றலின், "தோளும்" என்ற உம்மை, எச்சம். 'கண்டம் உடையான்' என்னாது, 'கண்டன்' என்கின்றாராகலின், எச்ச உம்மை முன்னர் வந்தது. "எட்டும்" என்ற உம்மை, முற்று: ஆடுங்கால், எட்டுத் திசையிலும் வீசுதற்கு வேண்டும் கைகளை முற்றவுடையன் என்றவாறு.
|