833. | தண்டேர்மழுப் படையான்மழ | | விடையான்எழு கடல்நஞ் | | சுண்டேபுரம் எரியச்சிலை | | வளைத்தான்இமை யவர்க்காத் | | திண்டேர்மிசை நின்றான்அவன் | | உறையுந்திருச் சுழியல் | | தொண்டேசெய வல்லாரவர் | | நல்லார்துயர் இலரே. | | 2 |
வாழும் இடங்களாய்' என்றவாறு, "மதி" என்றது, புத்தி தத்துவத்தை 'புண்ணிய பாவங்கட்குப் பற்றுக்கோடாவது புத்தி தத்துவமே' என்பதை மெய்ந் நூல்களிற் கண்டுகொள்க. "மதி" என்றதற்கு, இவ்வாறன்றி, சந்திரன் என்று உரைத்தலும் ஈண்டுச் சிறவாமை யறிக. இதனானும், 'விதியாய்' என ஆக்கச்சொல் வேண்டுதலானும், 'அதன் மதியாய்' என்னும் பாடமும் சிறவாதென்க. "வருவான்" என்றது, 'நிற்பான்' என்பது போல, பொருட்டன்மை குறித்ததாம். பல்லாற்றான் நினைத்தல், நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும், வாழ்த்தியும், வணங்கியும் நினைதல் முதலியவற்றை என்க. நமன் தமர் நலியாமை, வினைகள் பற்றறக் கழிந்தவழியாதலின், அந்நிலை உளதாம் என்றவாறு. 2. பொ-ரை: தண்டுபோல மழுப்படையை ஏந்தியவனும், இளமையான இடபத்தை யுடையவனும், தேவர்கள் பொருட்டு, கடலில் எழுந்த நஞ்சினையுண்டு, திரிபுரங்கள் எரியும்படி வில்லை வளைத்துத் திண்ணிய தேரின்மேல் நின்றவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருச்சுழியலிற் சென்று அவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள், இன்பம் உடையவரும், துன்பம் இல்லாதவரும் ஆவர். கு-ரை: "ஏர்" உவம உருபு. 'மழுப்படையைத் தண்டு போல உடையான்' என்றது, 'நெருப்பாய் நிற்கும் அஃது, அவனையாதும் துன்புறுத்தமாட்டாமையைக் குறித்தருளியபடியாம். 'கடல் எழு நஞ்சு' என மாற்றிக் கொள்க. "வளைத்தான்" என்றது முற்றெச்சம். "அவன்" பகுதிப் பொருள் விகுதி. நன்மை - இன்பமாகலின், "நல்லார்" என்றது. 'இன்பம் உடையவர்' என்றதாயிற்று.
|