பக்கம் எண் :

1138
 
841.நீருர்தரு நிமலன்திரு

மலையார்க்கயல் அருகே

தேரூர்தரும் அரக்கன்சிரம்

நெரித்தான்திருச் சுழியல்

பேரூரென வுறைவானடிப்

பெயர்நாவலர் கோமான்

ஆரூரன தமிழ்மாலைபத்

தறிவார்துய ரிலரே.

10

திருச்சிற்றம்பலம்


10. பொ-ரை: அருவிகள் பாய்கின்ற இறைவனது திருமலையில் எதிரொலி உண்டாக, அதன் அருகில் தனது ஊர்தியைச் செலுத்திய இராவணனது தலையை நெரித்தவனும், திருச்சுழியலைத் தனது பெரிய ஊராகக் கொண்டு எழுந்தருளியிருப்பவனும் ஆகிய இறைவனது திருவடிப் பெயரைப் புனைந்தவனும், திருநாவலூரார்க்குத் தலைவனும் ஆகிய நம்பியாரூரனது இத் தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் உணர்கின்றவர், துன்பம் யாதும் இலராவர்.

கு-ரை: "நிமலன் மலை" என்றார், மலமுடைய அவன் அணுகலாகாமையை நினையாமை பற்றி. "அயல் அருகு" ஒரு பொருட் பன்மொழி. இறைவனது பெயரை அவனது திருவடிப் பெயராக அருளினார், தம் பணிவு தோன்ற. "அடி" என்றதன்பின், பகர ஒற்று மிகாமைப் பாடம் ஓதுவாரும் உளர்.

சேரமான் பெருமாள் நாயனார் புராணம்
 

திருச்சுழியல் இடங்கொண்ட

செம்பொன்மலைச் சிலையாரக்

கருச்சுழியின் வீழாமைக்

காப்பாரைக் கடல்விடத்தின்

இருட்சுழியும் மிடற்றாரை

இறைஞ்சியெதிர் இதழிமலர்ப்

பருச்சுழியத் துடனூனா

யுயிரெனும்பா மலர்புனைந்தார்.

111

- தி. 12 சேக்கிழார்