858. | மாவை யுரித்ததள்கொண் டங்க மணிந்தவனை | | வஞ்சர் மனத்திறையும் நெஞ்சணு காதவனை | | மூவ ருருத்தனதாம் மூல முதற்கருவை | | மூசிடு மால்விடையின் பாகனை ஆகமுறப் | | பாவக மின்றிமெய்யே பற்று மவர்க்கமுதைப் | | பால்நறு நெய்தயிர்ஐந் தாடு பரம்பரனைக் | | காவல் எனக்கிறையென் றெய்துவ தென்றுகொலோ | | கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. | | 7 |
செய்தவாறு. 'நைகிற என்னை' எனப் பாடம் ஓதுதல் சிறவாமை யறிக. "காண்பதும்" என்ற உம்மை சிறப்பு. 7. பொ-ரை: யானையை உரித்து அத்தோலைப் போர்வையாகக் கொண்டு, எலும்பை மாலையாக அணிந்தவனும், வஞ்சனை யுடையவரது மனத்தின்கண் தனது நெஞ்சினாலும் சிறிதும் அணுகாதவனும், மும்மூர்த்திகளது உருவமும் தன் உருவமே யாகின்ற முதல்முதற் காரணனும், 'மூசு' என்னும் ஒலியுண்டாக உயிர்க்கின்ற பெரிய இடபத்தை நடத்துகின்றவனும், போலியாகவன்றி உண்மையாகவே தன்னை மனத்துட் பொருந்தப் பற்றுகின்ற அவர்கட்கு அமுதம் போல்பவனும், பால், நறுநெய், தயிர் முதலிய ஐந்திலும் மூழ்குகின்றவனும், மேலோர்க்கெல்லாம் மேலானவனும் ஆகிய மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த, 'திருக்கானப்பேர்' என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற, காளை வடிவினனாகிய பெருமானை, அடியேன், எனக்குக் காவலனாகிய தலைவனாகக் கிடைக்கப்பெறுவது எந்நாளோ! கு-ரை: 'நெஞ்சால்' என உருபு விரிக்க. நெஞ்சால் அணுகல், அணுக நினைத்தல். சிவபிரான், மூவர் உருவமும் தன்னுருவமேயாக நிற்றல், அவர்களைத் தன் உருவினின்றும் தோற்றுவித்தலாம் என்க. அப் பெருமான் தனது வலப்புறத்தினின்றும் அயனையும், இடப்புறத்தினின்றும் அரியையும், இருதயத்தினின்றும் அரனையும் தோற்றுவிப்பவன் என்பது, சிவாகமங்களுட் காணப்படும். கரு - காரணம். ஆடைக்கு நூல்போல இடைநிலை முதற்காரணனாகாது, ஆடைக்குப் பஞ்சிபோல முதல்நிலை முதற்காரணன் என்றதற்கு, "மூல முதற்கரு" என்று அருளிச்செய்தார். இதனானே, பரமசிவன், மூவருள் ஒருவனாய உருத்திரனாகாது, அவரின் மேலானவன் என்பது விளங்குதல் காண்க. இப்பகுதியை, சிவஞான போத முதற் சூத்திரக் கருத்துரைப் பாடியத்துள் பாடியம் உடையார் எடுத்துக் காட்டி விளக்கினமை அறிக.
|