859. | தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத் | | தூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல்நஞ் | | சுண்ட தனுக்கிறவா தென்று மிருந்தவனை | | ஊழி படைத்தவனோ டொள்ளரி யும்முணரா | | அண்டனை அண்டர்தமக் காகம நூல்மொழியும் | | ஆதியை மேதகுசீ ரோதியை வானவர்தம் | | கண்டனை யன்பொடுசென் றெய்துவ தென்றுகொலோ | | கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. | | 8 |
"மூசு" என்றது, ஒலிக்குறிப்பு. எருது நடத்துபவனை, 'பாகன்' என்றல், மரபு வழுவமைதி. பாவகம், நாடகமாதலின், அதற்கு இதுவே பொருளாதல் அறிக. "தயிர்" என்றதன்பின், 'முதலிய' என்பது எஞ்சி நின்றது 'எனக்குக் காவலாகிய இறை' என மாற்றி யுரைக்க. 'இறைவனாவான், காப்பவனே' என விதந்தவாறு, 'பதி' என்னும் வடசொற்கும் பொருள் இதுவேயாதல் உணர்க. "எய்துவது" என்றது. நினைவளவினன்றிப் பொருளால் கிடைக்கப் பெறுதல் என்றவாறு. 8. பொ-ரை: அடியார்களுக்கு எளிய ஒளியுருவினனும், வேதத்தை ஓதுபவனும், அத்தூய வேதத்தின் பொருளாய் உள்ள நீதி வடிவினனும், நீண்ட கடலில் எழுந்த நஞ்சினை உண்டு, அதனால் இறவாது எக்காலத்தும் இருப்பவனும், பல கற்பங்களில் உலகத்தைப் படைப்பவனாகிய பிரமனும், அழகிய திருமாலும் அறிய வொண்ணாத தேவனும், தேவர்களுக்கு ஞானநூலைச் சொல்லிய முதல்வனும். தேவர்களது கூற்றில் உள்ளவனும், தனது மேலான தகுதியையுடைய புகழைப் பலரானும் சொல்லப்படுபவனும் ஆகிய, மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த, 'திருக்கானப்பேர்' என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற, காளை வடிவினனாகிய பெருமானை அடியேன், அன்போடு சென்று அடையப்பெறுவது எந்நாளோ. கு-ரை: "இருந்தவன்" என்றது, 'இருக்கும் தன்மையைப் பெற்றவன்' என்றவாறு. இவ்வாறு இயல்பாய் உள்ள தன்மையை, இடையே ஒரு காலத்துப் பெற்றாற்போலக் கூறுதல், பான்மை வழக்கு, எனவே, "முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும்" - தொல் - சொல் - 240
|