பொழுது பெருமான், 'தக்கன் நம்மையிகழ்ந்து வேள்வி செய்கின்றான். அங்குச்சென்று நமக்குரிய அவியைக்கேள். கொடுக்கமறுத்தால் அவன் தலையை அறுத்து அவனைச் சேர்ந்தவர்களையும் அழிப்பாயாக என்றருளினார். அவ்வாறே, வீரபத்திரர் வேள்விச்சாலையடைந்து தக்கன்யாகத்தை அழித்தபோது, இந்திரனின் தோள்களை அறுத்தார். சூரியனைக் கன்னத்தில் அடித்துப் பற்களை உதிர்த்தார். பகன் என்னும் சூரியனுடைய கண்களைப் பிடுங்கினார். அக்கினியின் கைகளையும் ஏழு நாக்குகளையும் துணித்தார். இவ்வாறு தக்கனின் யாகத்தை அழித்தார். இவ் வரலாற்றைச் சுந்தரர். "பெற்றிமை ஒன்றறியாத தக்கனது வேள்விப் பெருந்தேவர் சிரந்தோள்பல் கரங்கள் பீடழியச் செற்றுமதிக் கலைசிதைய திருவிரலால் தேய்வித்து" (தி. 7 ப. 16 பா. 6) "இந்திரனைத் தோள்முரித்த இறையவன்" (தி. 7 ப. 16 பா. 2) என்று பல இடங்களில் அருளியுள்ளமை அறியத்தக்கது. சலந்தரனை அழித்தது: 1 சலத்தில் தோன்றினமையால் சலந்தரன் என்னும் பெயரைப் பெற்றான். அவன் காஞ்சியில் சிவலிங்கம் அமைத்துப் பூசித்து ஆண்மை, வலி, எல்லாவுலகத்தையும் ஆளும் ஆட்சி, வெற்றி, சிவபெருமான் தவிர வேறு யாவராலும் அழியாமை, காஞ்சியில் முத்தியடைதல் ஆகிய வரங்களைப் பெற்று உலகங்களை ஆண்டான். அப்பொழுது இந்திரன் முதலிய திக்குப் பாலகர்களையும், பிரமனையும் வென்று, திருமாலைச் சிறை வைத்திருந்து, தேவர்கள் வேண்டுகோளால் விடுதலைசெய்து வாழுகின்ற நாட்களில், ஒரு நாள் செருக்குக்கொண்டு சிவபெருமானை வெல்லக்கருதிக் கயிலைக்குச் சென்றான். அங்குப் பெருமானைப் போருக்கு அழைக்கு முன்னரே, அவன் தமது நெற்றிக்கண்ணினால் அவனது சேனைகளை அழித்து, ஆயிரஞ் சூரியர்போல ஒளிரும் சக்கரம் ஒன்றை உண்டாக்கி அவனையும் அழித்தருளினான். இவ்வரலாற்றைச் சுந்தரர்,
1 காஞ்சிப் புராணம் - சலந்தரேசப் படலம்.
|