"செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக்கருளி" (தி. 7 ப. 16 பா. 2) என்று அருளியிருத்தல் கண்டுமகிழத்தக்கது. கொக்குருவாய அசுரன் வாயைக் கிழித்தது: 1 கண்ணனைக் கொல்வதற்குப் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்த கம்சன் ஒருநாள் கண்ணனைக் கொல்ல பகன் என்னும் அசுரனை அனுப்பினான். அவன் கொக்கு வடிவங்கொண்டு கண்ணனை அடைந்தான். அப்பொழுது கண்ணன் அக்கொக்கின் வாயலகுகளைத் தன்னுடைய இரண்டு கைகளாலும் பிடித்துக் கிழித்து அதனைக் கொன்றான். இவ்வரலாற்றைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள், "புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கி உமிழ்ந்தானை" (தி. 7 ப. 40 பா. 1) என்று கூறியிருத்தல் கருதத்தக்கது. தாரகனை அழித்தது: 2 சிவபெருமான் திருக்கயிலையில் முருகப்பிரானுடன் வீற்றிருக்கையில், தேவர்கள் சூரபன்மன் முதலாய அசுரர்கள் தங்களுக்கு இழைக்கும் கொடுமைகளைப் பெருமானிடம் விண்ணப்பித்து அவற்றைப் போக்கியருள வேண்டுமென வேண்டினர். அவர்களுடைய வேண்டுகோட்கிரங்கிய பெருமான், முருகப்பிரானை நோக்கி, 'நீ சூரபன்மனை அழித்துத் தேவர்கள் துன்பந் துடைப்பாயாக' என்று கட்டளையிட்டுப் போருக்கு வேண்டிய ஆயுதங்களையும் தேர் முதலியவற்றையும் படைவீரர்களையும் அருளி, எல்லாப் படைகளுக்கும் தலைமையானதாக வேற்படை ஒன்றையும் கொடுத்தருளினான். முருகப்பிரானும் பெருமானை
1. பாகவதம். 2. கந்தபுராணம் - தாரகன் வதைப் படலம்.
|