வணங்கி விடைபெற்றுத் திருக்கயிலையினின்றும் தன் சேனைகளோடு பூமியையடைந்து கிரவுஞ்ச மலையைக் கண்டார். அப்பொழுது நாரதர், கிரவுஞ்ச மலையின் தன்மைகளையும், அங்குள்ள தாரகாசுரனின் வீரத்தையும் எடுத்துக்கூறி அவனைக் கொன்றால் சூரபன்மனைக் கொல்லுதல் எளிது' என்று முருகப் பிரானிடம் தெரிவித்தார். அவரும் உடன்பட்டு, வீரவாகுதேவரைச் சேனைகளுடன் அனுப்பி, தாரகனைக் கொன்றுவருமாறு ஆணை யிட்டருளினார். வீரவாகு தேவர் முருகப்பிரானிடம், விடைபெற்றுத் தாரகனின் மாயா புரியை வளைத்துப் பின்னர் அவனுடன் போரிட்டு அவன் படைகளை யழித்து, கடைசியில் கிரவுஞ்சமலையில் உள்ள குகை வழியில் தாரகன் பின்னே சென்று, அவனது மாயையால் மயங்கித் தூங்குவதுபோல் கிடந்தார். இவற்றையெல்லாம் நாரதர்மூலம் அறிந்த முருகப்பெருமான் பூத கணங்களுடன் போருக்குச் சென்று தாரகனோடு போர்செய்து, அவன் மாயைகளையெல்லாம் அறிந்துவென்று தமது வேற்படையை யேவி தாரகன் மார்பையும் கிரவுஞ்ச மலையையும் பிளந்து அவனை அழித்தார். இவ்வரலாற்றை நாயனார், "பொரும்பலம துடையசுரன் தாரகனைப் பொருது பொன்றுவித்த பொருளினைமுன் படைத்துகந்த புனிதன்" (தி. 7 ப. 16 பா. 9) என்று கூறியிருத்தல் காண்க. திரிபுரத்தை எரித்தது1 பூமி, அந்தரம், சுவர்க்கம் என்று சொல்லப்படும் மூன்று உலகங்களிலும் பொன், வெள்ளி, இரும்பு இவற்றாலாகிய மூன்று கோட்டைகளையுடைய அசுரர்கள் திரிபுரத்தவர் என்னும் பெயருடன் விளங்கினர். அவர்கள், சிவபத்தி, அடியார் பத்திகளிற் சிறந்து விளங்குவதோடு சிவபூஜையிலும் சிறந்து விளங்கினார்கள்.
1. கந்த புராணம் - கயிலாயப் படலம்
|