பக்கம் எண் :

119
 

அவர்களுடைய திரிபுரங்களில் வாழ்வோரும் சிவபத்தியுடையவர்களாயும் சிவநாமத்தை ஒலிப்பவர்களாயும் இருந்தனர். ஆயினும் அசுரர் குலத்தைச் சேர்ந்தவர்களாதலால் தேவர்களை வருத்தினர். பிரமன் முதலிய தேவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். திருமால் அத்தேவர்களுடன் ஒரு வேள்வியியற்றி, அதினினின்றும் பல பூதங்களை உண்டாக்கித் திரிபுரத்தவர்மேல் ஏவினர். அவை திரிபுரத்தவர்களை அணுக மாட்டாதனவாய் அழிந்தன.

பின்னர், திருமால், அவ்வசுரர்கள் சிவபெருமானைச் சார்ந்தவர்களாய் இருத்தலால் நம்மால் அவர்களை அழிக்கவியலாது; சிவபெருமானே அழிக்கவல்லவர். ஆதலால் நாம் அவ்வசுரர்கள் கொண்டுள்ள சிவபத்தியைச் சிதைப்போம் என்று கூறி, 'வேதநெறி குற்றமுடையதென்றும், மறுமை என்று ஒன்று இல்லையென்றும், எல்லாப் பொருளுங் கணந்தோறும் தோன்றியழியும் என்றும் கூறும் நூல் ஒன்று செய்து, தனது அம்சத்தில் ஆதிபுத்தன் என்னும் ஒரு புருடனைப் படைத்து, நீ நாரத முனிவனுடன் சென்று திரிபுரத்தவர்களுக்கு இந்நூலைப் போதித்து மயக்கி அவர்களைச் சிவநெறியினின்றும் நீக்குக' என்று அனுப்பினார்.

நாரதரும், ஆதிபுத்தனும் திரிபுரத்தவர்களை அடைந்து மயக்கித் தமது மாணக்கராகச்செய்து புத்தமத்ததைப் போதித்தனர். அவர்களும் சிவநெறியினின்றும் நீங்கினர். இதையறிந்த திருமால் மகிழ்ச்சியுற்று, தேவர்களோடு திருக்கயிலையையடைந்து, திரிபுரத்தசுரர்களால் தாம் பட்ட துன்பத்தையும், அவர்களைச் சிவநெறியினின்றும் மாறச்செய்ததையும் கூறி அவர்களை அழிக்கும்படி வேண்டினார். சிவபெருமான் 'போர்க்குரிய கருவி யாதும் இல்லையே' என பூமி தேர்த்தட்டாகவும் சூரிய சந்திரர் சக்கரங்களாகவும், வேதங்கள் குதிரைகளாகவும், பிரமன் சாரதியாகவும், மேருமலை வில்லாகவும், வாசுகி நாணாகவும், திருமால் அம்பாகவும் மற்றைய தேவர்கள் மற்றைய கருவிகளாகவும் அமைந்து நின்றனர். சிவபெருமான் அத்தேர்மீதேறி, அவ்வில்லை வளைத்து நாணேற்றிக் கணைபூட்டித் திரிபுரத்தவர்களை நோக்கி, ஓர் புன்னகை புரிந்த காலையில் திரிபுரங்களும் வெந்து நீறாயின. இவ்வரலாற்றைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள்,

"நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்தமரர் குறைந்திரப்ப நினைந்தருளி யவர்க்காய்