பக்கம் எண் :

120
 

வெற்பார்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தன்"

(தி. 7 ப. 16 பா. 5)

என்று அருளியுள்ளமை காண்க.

திருக்கண் புதைத்தது: 1

சிவபெருமான், மந்தரவெற்பில் உமாதேவியோடு மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் நாட்களில் ஒருநாள் விருப்பமிகுதியால் உமாதேவி முதுகுப்புறம் அடைந்து தனது இருசெங்கைகளால் பெருமானின் திருக்கண்களை இறுகப்புதைத்தாள். பெருமானின் வலதுகண் சூரியனாகவும் இடதுகண் சந்திரனாகவும் இருத்தலால் விண்ணுலகமுதல் தேவருலகம் பூவுலகம் முதலிய யாவும் இருண்டன. அதனால் படைத்தல் தொழில் நின்றது. வேள்வி தடைப்பட்டது. தவம் தானம் முதலியனவும் கடவுள் வழிபாடுகளும் நின்றன. தேவர்கள், முனிவர்கள், மக்கள் முதலிய எல்லோரும் அஞ்சி நடுங்கியிருக்கும் பொழுது உமையம்மை திருக்கைகளை நீக்கியதால் பெருமான் கண்ணின் ஒளி எங்கும் பரவியது. உலகங்கள் மீண்டும் முன்னிலையை யடைந்தன. உயிர்கள் உய்ந்தன. இவ்வரலாற்றால் "எல்லா ஒளிகட்கும் காரணம் இறைவன் அருளுருவத்தின் ஒளியே" என்னும் உண்மை விளங்குகிறது. இவ்வரலாற்றைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள்:

"மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தான்
மகிழ்ந்தவள் கண்புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா
உலகுடன் றான்மூடவிருள் ஓடும்வகை நெற்றி
ஒற்றைக்கண் படைத்துகந்த உத்தமன்"

(தி. 7 ப. 16 பா. 4)

என்று திருக்கலயநல்லூர்த் திருப்பதிகத்தில் கூறியிருத்தல் காண்க.

திருமாலை இடப வாகனமாகக் கொண்டது: 2

இரண்டாயிரம் சதுர்யுகங்கள் நான்முகனுக்கு ஒருநாள், அந்தநாள் முப்பதுகொண்டது ஒரு திங்கள், அத்திங்கள் பன்னிரண்டு கொண்டது ஒரு வருடம். இவ்வாறு நூறு வருடங்கள் கழிந்தால் நான்முகன் ஆயுட்காலம் நிறைவுறும். நான்முகனின் ஆயுட்காலம் திரு


1. காஞ்சிப் புராணம் - தழுவக்குழைந்த படலம் இரண்டாம் காண்டம், கண்புதைத்த படலம்.

2. கந்த புராணம் - ததீசியுத்தரப் படலம்.