பக்கம் எண் :

1173
 

87. திருப்பனையூர்

பதிக வரலாறு:

சுவாமிகள், திருப்புகலூரிறைவரைத் தொழுது செங்கல் பொன்னாகப் பெற்றுப் பதிகம் பாடிப் பரவி நிதிக் குவைகளை எடுத்துக் கொண்டு திருப்பனையூர் செல்லும்பொழுது, ஊர்ப் புறத்தே பெருமான் திருக்கூத்தாடும் கோலம் காட்டக்கண்டு வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 53)

குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவரது திருமேனியழகில் திளைத்து, அதனை எடுத்து அருளிச்செய்தது.

பண்: சீகாமரம்

பதிக எண்: 87

திருச்சிற்றம்பலம்

882.மாட மாளிகை கோபு ரததொடு

மண்ட பம்வள ரும்வ ளர்பொழில்

பாடல் வண்டறையும் பழ னத்திருப் பனையூர்த்
தோடு பெய்தொரு காதி னிற்குழை

தூங்கத் தொண்டர்கள் துள்ளிப் பாடநின்

றாடு மாறுவல்லா ரவ ரேய ழகியரே.

1


1. பொ-ரை: உயர்ந்த மேல்மாடங்களும், சிறந்த மாளிகைகளும், கோபுரங்களும், மண்டபங்களும் நாளும் நாளும் பெருகுகின்ற, ஓங்கி வளர்கின்ற சோலைகளில் இசைபாடுதலை யுடைய வண்டுகள் ஒலிக்கின்ற, நல்ல வயல்களையுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, ஒருகாதிற் குழை தூங்க, மறறொரு காதினில் தோட்டினை இட்டு, அடியார்கள் ஆடிப்பாட நின்று ஆடுமாறு வல்லவராகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையவர்.

கு-ரை: "ஒடு" எண்ணிடைச் சொல். "வளரும் அறையும்" என்ற பெயரெச்சங்கள் அடுக்கி, "திருப்பனையூர்" என்ற ஒரு பெயர் கொண்டன. "பழனம்" என்ற விதப்பால், 'நல்லன்' என்பது பெறப்பட்டது. "ஆடுமாறு வல்லார்" என்பது ஒருபெயர்த் தன்மைத்தாய், 'திருப்பனையூர்' என்றதனோடு, ஏழாம் வேற்றுமைத் தொகைபடத் தொக்கது. வருகின்ற திருப்பாடல்களினும் இவ்வாறே கொள்க. 'யாவரினும் மிக்க' என்பது இசையெச்சம்.