894. | ஊனை யுற்றுயி ராயி னீர்ஒளி | | மூன்று மாய்த்தெளி நீரோ டானஞ்சின் | | தேனை ஆட்டுகந்தீர் செழு மாடத் திருமிழலை | | மானை மேவிய கையி னீர்மழு | | வேந்தி னீர்மங்கை பாகத் தீர்விண்ணில் | | ஆன வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே. | | 3 |
என்ற திருஞானசமபந்தரது திருமொழியையுங் காண்க. இத் தலத்திருக்கோயிலில் உள்ள விமானம், திருமாலால் கொண்டுவரப்பட்டு, 'விண்ணிழி விமானம்' எனப் பெயர் பெற்று விளங்குதலை அறிந்து கொள்க. திருமாலை அவரது உலகமாகப் பாற்படுத்தருளிச் செய்தார், ஒரு நயம்பற்றி, "வந்து" என்னும் வினையெச்சம் 'இழிச்சிய' என்பதனுள், இழிதல் வினையைக் கொண்டது. 'அடக்கல்' என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது. அடக்குதல், மேலோங்குதலும், தன்கீழ்ப் பணியச்செய்தலும், இதுவே, மேற்சொல்லிய நயம் என்க. 3. பொ-ரை: உடம்பைப் பொருந்திய உயிரானவரே, 'ஞாயிறு, திங்கள், தீ' என்னும் மூன்று ஒளிகளும் ஆனவரே' தெளிவாகிய நீரோடு ஆனஞ்சினிடைத் தேனை ஆடுதலை விரும்புபவரே, மானைப் பொருந்திய கையை யுடையவரே, மழுவை ஏந்தியவரே, மலைமகள் பாகத்தை உடையவரே, வளவிய மாடங்களையுடைய திருமிழலையில், வானின்கண் ஓங்கிய வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே, அடியேனுக்கும் அருள்செய்யீர். கு-ரை: "ஆயினீர்" முதலிய அனைத்தும் விளிப்பெயர்கள், இவ்வாறன்றி, "வீழிகொண்டீர்" என்றது ஒன்றினையும் விளிப் பெயராக்கொண்டு, ஏனையவற்றை முன்னிலை முற்றாக்கி, அவற்றைத் தமக்கு அருளுதற்குரிய இயைபு தோன்ற எடுத்தோதிய வாறாக உரைப்பினுமாம். அவ்வாறுரைக்குமிடத்து, அவ்வியைபுகளைத் தோன்ற உரைக்குமாறு அறிந்து கொள்க. 'உற்ற' என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. "ஆனஞ்சின்" என்றதன்பின், 'இடை' என்பது எஞ்சி நின்றது.
|