பக்கம் எண் :

1183
 
895. பந்தம் வீடிவை பண்ணி னீர்படி
றீர்ம திப்பிதிர்க் கண்ணி யீரென்று
சிந்தைசெய் திருக்குஞ் செங்கை யாளர் திருமிழலை
வந்து நாடகம் வான நாடியர்
ஆட மாலயன் ஏத்த நாள்தொறும்
அந்தண் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே.

4

896.புரிசை மூன்றையும் பொன்றக் குன்றவில்

ஏந்தி வேதப் புரவித் தேர்மிசைத்

திரிசெய் நான்மறையோர் சிறந் தேத்துந் திருமிழலைப்

பரிசி னால்அடி போற்றும் பத்தர்கள்

பாடியாடப் பரிந்து நல்கினீர்

அரிய வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே.

5


4. பொ-ரை: 'உயிர்களுக்கு, 'பந்தம்' வீடு' என்னும் இரண்டையும் அமைத்தவரே, அவ்வாறு அமைத்தும் அவைகட்கு ஒளித்து நிற்பவரே நிலாத் துண்டமாகிய கண்ணியைச் சூடியவரே.' என்று நினைந்திருக்கும் செவ்விய ஒழுக்கத்தை யுடையவர்களது திருமிழலையுள், நாள்தோறும் வானுலகத்தில் உள்ள நாடக மகளிர்கள் வந்து நடனம் ஆடவும், திருமாலும் பிரமனும் துதிக்கவும், அழகிய குளிர்ந்த வீழி மரத்தின் அடியை இடமாகக் கொண்டவரே, அடியேனுக்கும் அருள் செய்யீர்.

கு-ரை: பந்தமாவது, பிறப்பிறப்புக்கள், "செங்கையாளர்" என்றது, அந்தணர்களை, கை, ஒழுக்கம் என்னாது, கை என்றே கொண்டு, தீயோம்புதலின், "செங்கை" என்று அருளினார் என்றலுமாம். 'செய்கையாளர்' என்றானும், "செம்மையாளர்" என்றானும் பாடம் ஓதுதல் சிறக்கும், "நாடியர்" என்றது 'தோழியர்' என்பது போலும், பெண்பாற் பன்மைப் பெயர்.

5. பொ-ரை: வேதங்களாகிய குதிரைகளைப் பூண்ட தேரின் மேல், மலையாகிய வில்லை ஏந்தி நின்று, மதில்கள் மூன்றையும் அழியும்படி வேறுபடுத்தவரே, நான்கு வேதங்களையும் உணர்ந்த அந்தணர்கள், அறிவு மிகுந்து துதிக்கின்ற திருமிழலையுள், அரிய வீழி மரத்தினது நிழலை இடமாகக் கொண்டவரே, நீர், உமது திருவடியைப் போற்றுகின்ற அடியவர்கள் அன்பினால் பாடி ஆட, மனம் இரங்கி, அவர்க்கு வேண்டுவனவற்றை அளித்தீர்; அதுபோல, அடியேனுக்கும் அருள்செய்யீர்.