பக்கம் எண் :

1186
 

விரும்பி வீற்றிருக்கின்ற நீர், 'பிச்சை எடுப்பது என்' என்று வினாவுவோர்க்கு மெய்ப்பொருளாய் விளங்குகின்ற, வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே, நீர், 'உமக்குத் தூய்மை யாகிய நீரே அமுத மாயினவாற்றினைச் சொல்லுக' என்று உமையவள் கேட்க, அதனைச் சொல்லியருளினீர்; அதுபோல, அடியேனுக்கும் அருள்செய்யீர்.

கு-ரை: தூயநீர் அமுதாதல், அடியவர் ஆட்டவிரும்பி ஆடுதல்; நீராட்டி வழிபடுதலை மிகவும் விரும்புகின்றவர், எனவே, 'எதனையும் விரும்பாத நீவிர், வழிபாட்டினை விரும்புவது என்' என்று உமையவள் வினாவ, அதனைச் சிவபெருமான் இனிது விளக்கியருளினமையை எடுத்தோதியவாறாம். சிவபிரான் உமைக்கு ஆகமங்கள் பலவற்றையும் சொல்லி, அவற்றின் முடிபாக, 'யாம் விரும்புவது பூசை ஒன்றையே' என அருளினமையை.

எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும்
உண்மை யாவது பூசனை எனஉரைத் தருள
அண்ண லார்தமை அர்ச்சனை புரியஆ தரித்தாள்
பெண்ணி னல்லவ ளாயின பெருந்தவக் கொழுந்து.

(தி. 12 திருக்குறிப்பு. புரா. 51)

என்ற சேக்கிழார் திருமொழியான் அறிக. இனி, இன்னதொரு வரலாறு இத்தலத்தைப் பற்றிஉளதேனும் கொள்க. "உமைக் கேட்க" என்றும் "தீயராக் குலையாளர்" என்றும் ஓதும் பாடங்களே எல்லாப் பதிப்புக்களிலும் காணப்படுகின்றன. இத் திருப்பாடல் இனிது பொருள் விளங்காமையின், இவ்வாறு அவை பிழை பட்டனபோலும்! பிச்சை யேற்றல், தனக்கென யாதும் இன்மையைக் குறிப்பதாகலின், அஃது, 'அவன் உலகிற்கு வேறானவன்' என்பதையே உணர்த்தும் என்பார், 'பலி ஏற்றது என் என்று வினவுவார்க்கு மெய்ப்பொருளா யினீர்' என்ற அருளினார், வினவுதல், ஆராய்தல்.

"இருந்தவா காணீர், இதுஎன்ன மாயம்!
அருந்தண் கயிலாயத் தண்ணல் - வருந்திப்போய்த்
தான்நாளும் பிச்சை புகும்போலும், தன்அடியார்
வான் ஆள மண்ஆள வைத்து"

(தி. 11 கயிலைபாதி. 53)

என மருட்கையுற்று ஓதியதும், இக்கருத்துப் பற்றியாதல் உணர்க.