பக்கம் எண் :

1188
 

89. திருவெண்பாக்கம்

பதிக வரலாறு:

சுவாமிகள், திருவொற்றியூரில் சங்கிலியாரை மணப்பதற்காகச் செய்த சபத மொழியைக் கடந்ததனால் கண் ஒளி மறைய, வழிச் செல்வோருடன் சென்று வடதிருமுல்லை வாயிலை வணங்கிப் பாடியபின், திருவெண்பாக்கம் அடைந்து, தொண்டர்களுடன் வலமாகத் திருக்கோயில்முன் எய்தி கைதலை மேற்கொண்டு புகழ்ந்து பரவி, 'நீர் கோயிலுள் உளீரோ?' என்று கேட்க, பெருமானும் ஊன்று கோல் ஒன்றை அருளி, அயலார் போல, 'உளோம் போகீர்' என்று கூறிய மொழி கேட்டு வருந்திப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 280)

குறிப்பு: இத்திருப்பதிகம் நுதலிய பொருள், இதன் வரலாற்றானே விளங்கும்.

பண்: சீகாமரம்

பதிக எண்: 89

திருச்சிற்றம்பலம்

902.பிழையுளன பொறுத்திடுவர்

என்றடியேன் பிழைத்தக்கால்

பழியதனைப் பாராதே

படலம்என்கண் மறைப்பித்தாய்

குழைவிரவு வடிகாதா

கோயிலுளா யேஎன்ன

உழையுடையான் உள்ளிருந்

துளோம்போகீர் என்றானே.

1


1. பொ-ரை: 'குழை பொருந்திய, தூங்குங்காதினை உடையவனே, நம்மாட்டுப் பிழை உளவாவனவற்றை நம் பெருமானார் பொறுத்துக்கொள்வார் என்னும் துணிவினால் அடியேன் பிழை செய்தால், அதனைப் பொறாததனால் உனக்கு உளதாகும் பழியை நினையாமலே நீ என் கண்ணைப் படலத்தால் மறைத்து விட்டாய்; இதுபோது இக்கோயிலினுள்ளே இருக்கின்றாயோ?' என்று யான் வினாவ, மானை ஏந்திய அவன், 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்!