கு-ரை: ஈற்றில் வருவித்து உரைத்தது, குறிப்பெச்சம், இத்திருப்பதிகத்தை, "முன்னின்று முறைப்பாடு போல்மொழிந்த மொழிமாலை" (தி. 12 ஏ. கோ. புரா. 281) எனச் சேக்கிழார் அருளினமையின், இவற்றையெல்லாம், முன்னின்ற அடியவர் பலரிடத்தும் சொல்லி முறையிட்டவாறாக உரைக்க. இன்னும், "முறைப்பாடு போல்" என்ற அதனால், வெளிப்படைப் பொருளில், 'இதுவோ அவனது கண்ணோட்டம்' என்று முறையிடுவார் போல அருளினாராயினும், 'இதுவும் எனக்குத் தக்கதே போலும்' என இரங்கினார் என்றே கொள்க. 'உலகியலால் நோக்கின் பிழையாகின்ற அவை, அருள்நெறியால் நோக்கின் செவ்வியவே யாதலின், பொறுப்பர் எனத் துணிந்தேன்' எனவும், 'அன்னது அறிந்தும் அவற்றைப் பொறாது ஒறுத்தாயாயின், நின் அருள்நெறியை நீயே அழித்தாய் என்னும் பழியையன்றோ நீ பூண்பாய் !' எனவும் 'என் கண்களை மறைப்பித்தபின் யான் பாடிய பாடல்களுக்குப் பின்னும் நீ, எங்கும் யாதொன்றும் செய்யவும் இல்லை; சொல்லவும் இல்லை; ஆதலின், எங்கே இருக்கின்றாய்?' எனவும் வினவிய வாறாம். இங்ஙனம் வினாவிய பின்னும், 'தான் செய்த ஒறுப்பு தனக்குப் பழியாவதில்லை; புகழேயாம்' என்பதைக் குறிப்பால் அருளியதன்றி, இனிது விளங்க அருளிச்செய்து 'எனக்கு இரங்கிலனே' என்பார், "உளோம் போகீர் என்றானே" என்று அருளினார். தாம் செய்தது உலகியலால் மட்டுமின்றி அருள் நெறியாலும் பிழையாதலை, அஃதாவது சங்சிலியாராகிய பேரடியார்க்கு இழைத்த குற்றம் ஆதலைக் கண் மறைந்த பின்னர் அறிந்தாரே யாயினும், அஃது இனிது துணியப்படாமையின், இவ்வாறு அருளிச்செய்தார் என்க. நாவலூரர் தம் பிழையது வன்மையை முன்பே உணர்ந்தமையை, இதற்கு முன்னர் அருளிச்செய்த திருப்பதிகங்களுள் உள்ள குறிப்புக்களால் உணர்க. 'படலத்தால்' என உருபு விரிக்க. படலம், கண்ணில் படர்ந்து ஒளியை மறைப்பதொன்று. "மறைப் பித்தாய்" என்றது, 'மறைவித்தாய்' எனப் பொருள் தந்தது. "உளாயே" என்ற ஏகாரம், வினா. ஏகாரம் பிறிது பொருள் உடைய தாயின், இறைவர், "உளோம் போகீர்" என்னார் என்க. 'உள்ளிருந்து' என்றது 'வெளிநில்லாது' என்றவாறாம். "போகீர்" என்றது இறைவர் அருளிச்செய்த சொல்லை அவ்வாறே நாவலூரர் கொண்டு கூறியதாம். ஆகவே, இறைவர் நாவலூரரைப் பன்மைச் சொல்லாற் குறித்தது, புறக்கணிப்புக் காரணமாக என்பது போதரும். "உளோம் போகீர்" என்றது, 'யாம் கோயிலினுள் இல்லாமலில்லை; இருக்கின்றோம்; நீர்
|