922. | பாரூரும் அரவல்குல் உமைநங்கை யவள்பங்கன் | | பைங்கண் ஏற்றன் | | ஊரூரன் தருமனார் தமர்செக்கி லிடும்போது | | தடுத்தாட் கொள்வான் | | ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீகொங்கில் | | அணிகாஞ் சிவாய்ப் | | பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தை | | பெற்றா மன்றே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
கு-ரை: "நாடு" என்ற முதனிலைத் தொழிற்பெயர், செயப்பாட்டு வினைக்கண் வந்தது. 'தாடு - தலைமை' என்பது தமிழ்ப் பேரகராதி. 'மோடுடைய சாக்கியர், முடையுடைய சமணர்' என மொழி மாற்றுப் பொருள்கோள் வந்தது. சமணர் நீராடாமையையும், சாக்கியர் ஊன் உண்ணுதலையும் அறிக. 10. பொ-ரை: மனமே, நிலத்தில் ஊர்ந்து செல்கின்ற பாம்பினது படம்போலும் அல்குலையுடைய 'உமை' என்னும் நங்கையது பாகத்தையுடையவனும், பசிய கண்களையுடைய இடபத்தை யுடையவனும், ஊர் தோறும் எழுந்தருளியிருப்பவனும் நம்மை, கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும் போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும், நம்பியாரூரனுக்குத் தலைவனும், திருவாரூரை உடையவனும், மேற்றிசையில் உள்ள கொங்கு நாட்டில், அழகிய காஞ்சிநதியின் கரையில் விளங்கும் பேரூரில் உள்ளவரது கடவுளும் ஆகிய இறைவனை, பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் அடைந்து விட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது! கு-ரை: சிவபெருமானது திருக்கோயில் இல்லாத ஊர் ஊரன்று; ஆதலின், அப்பெருமானை, "ஊரூரன்" என்று அருளினார். கொங்கு நாட்டில் காஞ்சிநதிக் கரையில் உள்ள, 'பேரூர்' என்னும் வைப்புத் தலத்தில் கூத்தப் பெருமான் சிறந்து விளங்குதலும், அதனால் அது, 'மேலைச் சிதம்பரம்' என வழங்கப்படுதலும் உண்மையின், சுவாமிகள் அங்குக்கண்ட காட்சியை நினைந்து, இத்தில்லைச் சிற்றம்பலத் திருப்பதிகத்துள் சிறப்பித்து அருளிச் செய்தார் என்க.
|