பக்கம் எண் :

1224
 
947.முழுநீ றணிமே னியன்மொய் குழலார்
எழுநீர் மைகொள்வான் அமரும் இடமாம்
கழுநீர் கமழக் கயல்சேல் உகளும்
செழுநீர் நறையூர்ச் சித்தீச் சரமே.

5

 

948.ஊனா ருடைவெண் டலைஉண் பலிகொண்
டானார் அடலே றமர்வான் இடமாம்
வானார் மதியம் பதிவண் பொழில்வாய்த்
தேனார் நறையூர்ச் சித்தீச் சரமே.

6



கு-ரை: 'மறங்கொள்' என்பது, எதுகை நோக்கி, வலிந்து நின்றது. 'உய்யக்கொள்ளுதல்' என்பதுபோல, 'இறக்கொள்ளுதல்' என்பதும் ஒருசொல் நீர்மைத்து. 'நறா' என்னும் குறிற்கீழ் ஆகாரம், செய்யுளிடத்துக் குறுகிற்று. மலர்கள் கூம்புவதைத் துயில்வதாகவும், மலர்தலை விழிப்பதாகவும் கூறுதல் இலக்கிய வழக்கு திறத்தலுக்கு எழுவாய் வருவிக்க. 'திறக்கும்' என்னாது. 'சிறக்கும்' என்பதே பாடம் எனலுமாம்.

5. பொ-ரை: குளங்களில் செங்கழுநீர்ப் பூவின் மணங் கமழுமாறு அவைகளின்மேல் கயல்மீன்களும், சேல் மீன்களும் துள்ளி வீழ்கின்ற, மிக்க நீரையுடைய திருநறையூரில் உள்ள, 'சித்தீச்சரம்' என்னும் திருகோயிலே, திருமேனிமுழுவதும் நீற்றை அணிந்தவனும், அடர்ந்த கூந்தலையுடைய மகளிரது உயர்ச்சி பொருந்திய பண்புகளைக் கொண்டவனும் ஆகிய இறைவன் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற இடமாகும்.

கு-ரை: "மொய்குழலார்' என்றது, தாருகாவனத்து முனிவர் பத்தினியரை. அவர்களது உயர்ந்த பண்புகள், நாணம் முதலியன, மீன்கள் துள்ளுதலால் மலர்கள் மணத்தை வீசுகின்றன என்க.

6. பொ-ரை: விண்ணிற் பொருந்திய சந்திரன் நுழைந்து செல்லும், வளவிய சோலைகளினிடத்தில் தேன் நிறைந்து நிற்கும் திருநறையூரில் உள்ள, 'சித்தீச்சரம்' என்னும் திருக்கோயிலே, ஊன் பொருந்திய, உடைந்த, வெள்ளிய தலையில், உண்ணுதற்குரிய பிச்சையை ஏற்று, ஆனினத்ததாகிய, வெற்றியையுடைய ஏற்றை விரும்புபவனாகிய இறைவனது இடமாகும்.