949. | காரூர் கடலில் விடம்உண் டருள்செய் நீரூர் சடையன் னிலவும் மிடமாம் வாரூர் முலையார் மருவும் மறுகில் தேரூர் நறையூர்ச் சித்தீச் சரமே. | | 7 |
950. | கரியின் னுரியுங் கலைமான் மறியும் எரியும் மழுவும் உடையான் இடமாம் புரியும் மறையோர் நிறைசொற் பொருள்கள் தெரியுந் நறையூர்ச் சித்தீச் சரமே. | | 8 |
கு-ரை: இத்திருப்பாடலின் முதலடியை, "ஊனார் உடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்" (தி. 8 திருக்கோத் - 2) என்னும் திருவாசக அடியோடு வைத்துக் காண்க. "ஆன்" என்றது, ஆனினது பொதுத்தன்மையை. பதிதல் - ஆழ்தல். 7. பொ-ரை: கச்சு மேற்பொருந்தப்பெற்ற தனங்கைளயுடைய மகளிர் அழகுடன் நிறைந்து நிற்கும் தெருக்களில் தேர்கள் ஓடுகின்ற திருநறையூரில் உள்ள, 'சித்தீச்சரம்' என்னும் திருக்கோயிலே, கருமை நிறம் பொருந்திய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு, தேவர்கட்கு அருள்செய்த, நீர்ததும்பும் சடையினையுடையவனாகிய இறைவன் விளங்கியிருக்கின்ற இடமாகும். கு-ரை: 'இளமையையுடைய மகளிரும், மைந்தரும் செல்வச் சிறப்போடு வாழும் ஊர், திருநறையூர்' என்று அருளியபடியாம். 8. பொ-ரை: தமது கடமைகளை விரும்பிச் செய்யும் அந்தணர்கள், நிறைந்த சொற்களின் பொருளை ஆராய்கின்ற திருநறையூரில் உள்ள, 'சித்தீச்சரம்' என்னும் திருக்கோயிலே, யானைத் தோலையும், ஆண் மான்கன்றையும், எரிகின்ற மழுவையும் உடையவனாகிய இறைவனது இடமாகும்.
|