94. திருச்சோற்றுத்துறை பதிக வரலாறு: நம்பியாரூரர், திருக்கலய நல்லூரைப்பணிந்து பாடிய பின், திருக்குடமூக்கு, திருவலஞ்சுழி, திருநல்லூர் முதலிய பல தலங்களையும் வணங்கிக்கொண்டு, திருச்சோற்றுத்துறை யடைந்து பணிந்து பாயருளியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 70) குறிப்பு: இத் திருப்பதிகமும், மேலைத் திருப்பதிகத்தோடு ஒருங்கொத்தது என்க. பண்: கௌசிகம் பதிக எண்: 94 திருச்சிற்றம்பலம் 954. | அழல்நீர் ஒழுகி யனைய சடையும் உழையீர் உரியும் முடையான் இடமாம் கழைநீர் முத்துங் கனகக் குவையும் சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே. | | 1 |
1. பொ-ரை: மூங்கில்களிடத்து உளவாகிய சிறந்த முத்துக்களும், பொற்குவியல்களும் சுழிகளில் சுழல்கின்ற நீரையுடைய காவிரி யாற்றையுடைய, 'திருச்சோற்றுத்துறை' என்னும் தலமே, நெருப்பு நீர்த் தன்மையுடையதாய் ஒழுகினாற்போலும் சடையையும், மானையும், யானை, புலி இவைகளை உரித்த தோலையும் உடையவனாகிய இறைவனது இடமாகும். கு-ரை: "நீர்" என்றதன்பின், 'ஆய்' என, ஆக்கச் சொல் வருவிக்க, "அழல் நீராய் ஒழுகியனைய" என்றது, சடையினது நிறத்தையும், நீண்டு தூங்குதலையும் உணர்த்தற்கு. இனி, 'நீர் அழல் ஒழுகியனைய' எனமாற்றி, 'நீர் நெருப்பின்மேல் ஒழுகினாற்போலக் கங்கைததும்பும் சடை' என்று உரைப்பாரும் உளர். "உழை" என்றதன் பின்னும், எண்ணுமை விரிக்க. மூங்கில் முத்துக்கள் மலையினின்றும் வந்தனவென்க. "நீர்முத்து" என்றதில் நீர் - நீர்மை; சிறப்பு.
|